

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஜூன் 12-ம் தேதி இ100 எரிபொருள் (100% எத்தனால்) பயன்பாட்டுக்கான விதிமுறைகளில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் வாகனத் தயாரிப்பாளர்கள், எரிபொருள் விற்பனையாளர்கள் மற்றும் சோதனை முகமைகள் எத்தனால் வாகனங்களின் வணிக ரீதியான வெளியீட்டுக்கான பணிகளைத் தொடங்கலாம். ஏப்ரல் 2026-க்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு முன்பாகவே 20% எத்தனால் கலப்பு (இ20) திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக எட்டியதைத் தொடர்ந்து இந்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சேமிக்கப்பட்டுள்ளதோடு, விவசாயிகளுக்கு ரூ.80,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சமாக, 100% எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ‘மாருதி சுசுகி வேகன்ஆர்' கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாருதி மட்டுமின்றி டொயோட்டா, எம்ஜி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும் அடுத்த சில வாரங்களில் இ100 ரக வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. இருசக்கர வாகனப் பிரிவில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கெனவே இரண்டு பிளெக்ஸ்-பியூல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்போது இ 85 பெட்ரோல் வழக்கமான பெட்ரோலை விட குறைவான விலையில் விற்கப்படுகிறது. மேலும், இது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, இந்திய விவசாயத்துறைக்கு ஆதரவாக அமையும். எனினும், இந்த எரிபொருள் தற்போதைய சாதாரண பெட்ரோல் வாகனங்களுக்கானது அல்ல; இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘பிளெக்ஸ்- பியூல்' வாகனங்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.