

சென்னை: மெட்டா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் அதன் மொத்த ஊழியர்களில் (சுமார் 79,000 பேர்) 20 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வர, பொருளாதார சிக்கல்கள், வணிக ரீதியான செயல்பாடு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதுண்டு. இந்த சூழலில் மெட்டா நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மெட்டா செய்தித் தொடர்பாளர் விளக்கம் தந்துள்ளார். “மெட்டா நிறுவனத்தில் இயங்கி வரும் பல்வேறு குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது வழக்கம். இதன் மூலம் அவர்கள் தங்கள் இலக்கை அடைய உதவுவோம். அதே நேரத்தில் ஊழியர்களின் பணி வாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் இருந்தால் அதற்கான மாற்றை கண்டறிவோம்” என தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனம் அதன் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்ந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 700 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பொறியியல் துறை சார்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்களுக்கு மாற்றாக ஆட்டோமேஷன் முறையை மெட்டா நாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மெட்டா நிறுவனம் அதன் முதலீடு மற்றும் செலவினத்தை 162 பில்லியன் டாலர்களில் இருந்து 169 பில்லியனாக உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏஐ சார்ந்த முதலீடுகளும் அடங்கும்.
மறுபக்கம் மெட்டாவில் உயர் பொறுப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக தனது நிறுவனத்தின் பங்குகளை வழங்கி உள்ளது. மேலும், ஏஐ வல்லுநர்களை பணியமர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.