

மறு சீரமைப்பால் புதுப்பொலிவு பெறும் மதுரை ரயில் நிலையத்தின் மாதிரி படம்.
மதுரை: முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான மதுரை ரயில் நிலையம், மறுசீரமைப்பு மூலம் புதுப்பொலிவு பெறுகிறது. பயணிகளுக்கான கூடுதல் வசதிகளும் அதிகரிக்கப் படுகின்றன. இது தொடர்பாக, கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மதுரை ரயில் நிலையம் ரூ.347.47 கோடியில் மறுசீரமைக்கப்படுகிறது.
கிழக்கு, மேற்கு பகுதி ரயில் முனைய கட்டிடங்கள், 42 மீட்டர் அகல ரயில் பாதை, மேற்குப் பகுதியில் பயணிகள் காத்திருப்பு வளாகம், நடைமேம்பால மேம்பாடு, பார்சல் போக்குவரத்துக்கென புதிய தனி நடை மேம்பாலம், விசாலமான இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் காப்பகங்கள், கூரையுடன் கூடிய பாதசாரிகள் நடைபாதை, ரயில் நிலையம் - பெரியார் பேருந்து நிலையத்தை இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளும் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
கிழக்கு - மேற்கு முனைய கட்டிடங்களை இணைத்து, ரயில் பாதை மேற்புற பகுதியில் பெரிய விசாலமான அரங்கு கட்டப்படுகிறது. அதில் பயணிகள் காத்திருப்பு பகுதி, பயணச்சீட்டு பதிவு மையம், ஓய்வறைகள், உணவு விடுதிகள் அமைகின்றன.
ரயில் நிலையத்தை பெரியார் பேருந்து நிலையத்தோடு இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளில் ரயில்வே எல்லைக் குள் 38 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. 456 சதுர மீட்டர் மட்டும் இருந்த பயணிகள் தங்கும் அறைகள் 2,372.31 சதுர மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.
பல படுக்கை ஓய்வறைகளில் தனித்தனியாக ஆண்களுக்கு 47 படுக்கைகளும், பெண்களுக்கு 21 படுக்கைகளும் அமைக்கப் படுகின்றன. பயணிகள் காத்திருக்கும் பகுதி 354 இருக்கைகளுடன் 3,855 சதுர மீட்டராக அதிகரிக்கிறது. 450 சதுர மீட்டர் மட்டும் இருந்த குளிரூட்டப்பட்ட பயணிகள் தங்கும் அறைகள், 252 இருக் கைகளுடன் 773.12 சதுர மீட்டராக உயர்த்தப்படுகிறது.
அதேபோல், 10,200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, 287 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் பரப்பளவு அதிகரிக்கப்படுகிறது.
உணவு, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டு 35,730 சதுர மீட்டரில் அமைகின்றன. 2,475 சதுர மீட்டரில் இருந்த ரயில் நிலைய கட்டிடம் 22,846 சதுர மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.