

டாவோஸ்: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்றுள்ளார்.
இந்த மாநாட்டுக்கு நடுவே அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ”இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களைச் சந்திக்கும் ஒரு பெரிய தளம். மத்திய பிரதேசத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறித்து நான் திருப்தி அடைகிறேன். இந்த பயணமும் அதே திசையில்தான் அமைந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் செயல்பாடுகள் குறித்து இந்த உலகளாவிய மேடையில் அறிமுகப்படுத்துவது ஒரு பெரிய விஷயமாகும். எங்களது தூதுக்குழு பல்வேறு துறைகளில் அரசு செய்து வரும் பணிகளை விரிவாக முன்வைத்துள்ளது. எங்களது கொள்கைகளும், வேலை செய்யும் விதமும் டாவோஸில் ஓர் அதிர்வை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் நாங்கள் பயனடைந்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.