

ஊதிய உயர்வு, அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவரும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், அடுத்தகட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் இப்படித் தொடர் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் தொடர்வது வருத்தம் அளிக்கிறது.
வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் தமிழக சுகாதாரத் துறை நாட்டில் முன்மாதிரியாகத் திகழ்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் இதில் பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்றனர். என்றாலும் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக அவர்களுக்கு நீண்ட காலமாக மனக்குறை உண்டு.
2009இல் திமுக ஆட்சிக் காலத்தில் அரசாணை 354 வெளியிடப்பட்டது. இதன்படி மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது திமுக ஆட்சிக் காலத்திலும் பின்னர் வந்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி 2019இல் அரசு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.