

புதுடெல்லி: நாடு முழுவதும் சமையல் காஸ் தட்டுப்பாடு உள்ளதாக கூறுவது புரளியே என்று அகில இந்திய சமையல் காஸ் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்திரபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சமையல் காஸ் தட்டுப்பாடு என்று புரளி கிளப்பி உள்ளனர். உண்மையில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு எந்த மாநிலத்திலும் இல்லை.
கடந்த மாதம் 28-ம் தேதி அமெரிக்கா - ஈரான் போர் தொடங்கிய பின்பும் வழக்கமான எண்ணிக்கையில் பிரச்சினையின்றி விநியோகம் தொடர்ந்தது. புரளி மற்றும் தவறான செய்திகளின் காரணமாக தட்டுப்பாடு என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25,000 விநியோகஸ்தர்கள் உள்ளனர். அவர்களிடம் உள்ள வீடுகளுக்கான இணைப்புகள் எண்ணிக்கை சுமார் 22 கோடி.
மேலும், எல்பிஜி தட்டுப்பாடு மீதான புகார்களும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க புகார்களும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து மட்டுமே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இந்த புகார் இல்லை.
புரளி காரணமாக வீட்டில் சும்மா கிடக்கும் சிலிண்டர்களுக்கும் ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்யத் தொடங்கினர். இதனால், வழக்கத்துக்கு மாறாக அதிக சிலிண்டர்கள் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டது. வழக்கத்துக்கு மாறாக தேவை கூடினால் தட்டுப்பாடு ஏற்படுவது இயற்கைதான். அதேபோல் ஒரு வீட்டில் வசிக்கும் உடன் பிறந்தவர்கள் உள்ளிட்டோருடன் ஒன்றுக்கும் மேற்பட்ட எல்பிஜி இணைப்பை வைத்துள்ளனர். ஆனால், அனைவருக்கும் சேர்த்து ஒரே சமையலறையில் ஒரு சிலிண்டர்தான் பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில், பல நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாதவற்றை புரளி காரணமாக நிரப்பி வைத்துக் கொள்ள வாடிக்கையாளர்கள் விரும்பியதும் ஒரு முக்கியப் பிரச்சினை.
மார்ச் 1-க்கு பிறகுதான் வளைகுடா நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்த சுமார் 25 சதவீத எரிவாயு தடைபட்டது. ஏற்கெனவே இருந்த கையிருப்பு காரணமாக இந்த தடையால் பெரிய பாதிப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.