

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) தொடர்பான ஒரு திட்டத்துக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "ஒரு இபிஎப்ஓ கணக்கில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பங்களிப்போ அல்லது பரிவர்த்தனையோ இல்லாவிட்டால் அது செயல்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப்படும். இந்த கணக்குகளில் ரூ.1,000 அல்லது அதற்கு குறைவாக இருப்பு இருந்தால், அந்த தொகை சந்தாதாரரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படும். இதற்கு பயனாளிகள் கோரிக்கை வைக்கவோ அல்லது ஆவணங்களை சமர்ப்பிக்கவோ தேவையில்லை” என்று தெரிவித்தன.
புள்ளி விவரப்படி செயல்பாட்டில் இல்லாத இபிஎப்ஓ கணக்குகள் மொத்தம் 31.86 லட்சம் உள்ளன. அவற்றில் மொத்தம் ரூ.10,903 கோடி வைப்புத் தொகை உள்ளது. இந்நிலையில் சுமார் 6 லட்சம் செயல்படாத கணக்குகளில் ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவாக இருப்பு உள்ளது. இந்த 6 லட்சம் கணக்குகளில் மட்டும் சுமார் ரூ.600 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.