

புதுடெல்லி: எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28 முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த ஏப்.8-ம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிக போர் நிறுத்தத்தை அமல்படுத்தின. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடந்த ஜூன் 18-ம் தேதி இரு நாடுகள் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
போர்க் காலத்தில் ஈரானை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி சமையல் காஸ் மற்றும் எல்என்ஜி காஸுக்குதட்டுப்பாடு ஏற்பட்டது. பெட்ரோல், டீசல், காஸ் விநியோகத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த மாதம் 18-ம் தேதிக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் காஸ் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 1-ம் தேதி நீக்கியது. ஆனால், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எல்என்ஜி காஸுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை.
இந்தியாவின் எல்என்ஜி தேவையில் சுமார் 65 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது வளைகுடா நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்து சீரடைந்துள்ளதால் எல்என்ஜி மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு இருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது: எல்என்ஜி காஸ் மூலமாகவே உள்நாட்டு உரத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அமெரிக்கா - ஈரான் போரால் எல்என்ஜி காஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உரத் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக நாட்டின் வேளாண் சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் எழுந்தது. இதனாலேயே இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் மாற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
மேலும் எல்என்ஜி காஸை அடிப்படையாக வைத்து பல்வேறு மின் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன. அவை மூடப்பட்டதால் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து எழுந்தது. உருக்கு,சிமென்ட், கண்ணாடி, பிளாஸ்டிக், ரசாயன ஆலைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் இப்பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதால் இந்திய தொழில் துறைக்கு புதியஉத்வேகம் கிடைத்திருக்கிறது. குறிப்பாக எல்என்ஜி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மீண்டும் தடையின்றி விநியோகம் செய்யப்படும் என்ற பெட்ரோலியஅமைச்சகத்தின் உத்தரவை முழுமனதோடு வரவேற்கிறோம். இவ்வாறு தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.