போலி கடன் செயலிகளால் திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் பாதிப்பு

போலி கடன் செயலிகளால் திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் பாதிப்பு
Updated on
2 min read

திருப்பூர்: ​போலி கடன் செயலிகள் மூல​மாக சிறிய கடன்களை பெற்​று​விட்​டு, அதனைக் கட்ட முடி​யாமல் திருப்​பூர் பின்​னலாடை தொழி​லா​ளர்​கள் தற்​கொலை போன்ற விபரீத முடிவு​களுக்​கு செல்​வ​தாக புகார்​கள் எழுந்துள்​ளன.

திருப்​பூரில் பின்​னலாடை உற்​பத்தி மற்​றும் அதனை சார்ந்த தொழில்​களில் வெளியூர் மட்​டுமின்றி வட மாநிலங்​களை சேர்ந்த லட்​சக்​கணக்​கான தொழிலாளர்கள் ஈடு​பட்டு வரு​கின்​ற​னர்.

தொழி​லா​ளர்​கள் வாங்​கும் ஊதி​யத்தை வீட்டு வாடகை, உணவு, குடும்​பத்​தினருக்கு அனுப்​பிவைப்​பது என செல​விட்டு வரு​கின்​ற​னர். உணவு, உடை உள்​ளிட்ட சிறு தேவைகளுக்கு பணம் தேவைப்​படும்​போது முகநூல், இன்ஸ்​டாகி​ராம் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களில் ஆவணம் இல்​லாமல் உடனடி​யாக கடன் கிடைக்​கும் என்ற கவர்ச்​சிகர​மான விளம்​பரங்​களை நம்பி போலி கடன் செயலிகளை தங்​களது செல்​போனில் பதி​விறக்​கம் செய்​கின்​ற​னர்.

அவ்​வாறு பதி​விறக்​கம் செய்​யப்​பட்ட செயலியில் கேட்​கப்​படும் ஆதார் அட்​டை, பான்​கார்டு உள்​ளிட்ட விவரங்​களை அனுப்​புகின்றனர். மேலும், 5 உறவினர்​களின் செல்​போன் எண்​களைக் கேட்​கின்​ற​னர்.

இதற்கு தங்​களது தாய், தந்​தை, மனை​வி, உறவினர்​கள் மற்​றும் நண்​பர்​கள் என 5 பேரின் எண்​களை கொடுத்​தவுடன், அதனை சரி​பார்த்து அந்த எண்​கள் செல்​போனில் பதிவு செய்​யப்​பட்​டிருப்​பதை செயலி உறுதி செய்து கொள்​ளும். இதன் பின்​னர் செல்ஃபி மூல​மாக புகைப்​படத்தை எடுத்து அனுப்​பிய​வுடன், வங்கி கணக்கு எண்​ணைக் கேட்கத் தொடங்​கும்.

தொழி​லா​ளர்​கள் ரூ.3 ஆயிரம் கடன் கேட்​டிருந்​தால் செயல்​முறை கட்​ட​ணம், ஜிஎஸ்​டி, பாது​காப்பு முன்​தொகை உள்​ளிட்ட பல்​வேறு முறை​களில் கட்​ட​ணங்​களைப் பிடித்​தம் செய்து விட்டு சுமார் ரூ.1,800 முதல் ரூ.2 ஆயிரம் வரை​ மட்​டுமே அவர்​களது வங்​கிக் கணக்​குக்கு அனுப்​பப்​படும்.

இதுதொடர்​பாக தொழி​லா​ளர்​கள் சம்​பந்​தப்​பட்ட செயலி​யில் சென்று புகார் ஏதும் செய்ய முடி​யாது. கடனை திருப்பி செலுத்த வேண்​டிய தேதிக்கு ஒரு நாள் முன்​பாக கணினி​யில் இருந்து ‘வாட்​ஸ்​அப் கால்’ மூல​மாக வட மாநிலங்​களைச் சேர்ந்த நபர்​கள் அழைப்பு விடுத்து கடனை உடனடி​யாக திருப்பி செலுத்த வேண்​டும் என்று தெரி​விப்​பார்​கள்.

அதன்​படி, குறிப்​பிட்ட காலத்​துக்​குள் பணத்தை செலுத்​த​வில்லை என்​றால் வங்​கதேசம், சீனா உள்​ளிட்ட நாடு​களில் இருந்து பல்​வேறு எண்​களில் வாட்​ஸ்​அப் அழைப்பு மூல​மாக கடன் பெற்ற நபர்​களைத் தொடர்ந்து அழைத்து துன்​புறுத்​து​வார்​கள்.

அதி​லும் குறிப்​பாக 3 முதல் 5 நாட்​கள் அவகாசத்​தில் கூடு​தல் அபரா​தத்​துடன் தொகையை செலுத்​தா​விட்​டால், அவர்​கள் கொடுத்​துள்ள உறவினர்​கள், நண்​பர்​களின் செல்​போன் எண்​களை​யும் தொடர்பு கொண்டு கடன் தொகையை உடனடி​யாக செலுத்த வேண்​டும் என மிரட்​டல் விடு​வார்​கள்.

மார்​பிங் புகைப்​படங்​கள்

அப்​போதும் பணத்தை செலுத்​த​வில்லை என்​றால், கடன் பெற்​றவரின் புகைப்​படத்தை ஆதார் அட்​டை​யில் இருந்து எடுத்து மார்​பிங் முறை​யில் ஆபாச​மாக சித்​தரித்து அதனை கடன் பெற்​றவ​ருக்கு முதலில் அனுப்பி மிரட்​டல் விடுக்​கின்​ற​னர்.

வேறு வழி​யின்றி நண்​பர்​கள், உறவினர்​களிட​மிருந்து கடனாகப் பெற்று கூடு​தல் அபரா​தத்​துடன் தொகையை பெரும்​பாலான தொழி​லா​ளர்​கள் ‘கியூ ஆர்’ குறி​யீடு மூல​மாக செலுத்தி விடு​கின்​ற​னர்.

அவ்வாறு பணம் செலுத்​திய பின்​னரும், ‘நீங்​கள் அனுப்​பிய பணம் எங்​களது வங்​கிக் கணக்​கில் வந்து சேர​வில்​லை. மீண்​டும் ஒரு முறை பணம் அனுப்​புங்​கள்’ என்​றும், ‘இரு​முறை பணம் வந்​திருந்​தால் சில மணி நேரத்​திலேயே உங்​களது வங்​கிக் கணக்​கிற்கு வரவு வைக்​கப்​படும்’ என்​றும் வாட்​ஸ்​அப் குறுஞ்​செய்தி மூல​மாக தெரி​விப்​பார்​கள்.

சித்​தரிக்​கப்​பட்ட ஆபாச புகைப்​படம் வெளியே வந்து விட்​டால் அவமானம் என்​ப​தற்​காக பெரும்​பாலான​வர்​கள் மீண்​டும் ஒரு முறை கடன் பெற்று பணத்தை செலுத்தி விடு​கின்​ற​னர்.

பணம் செலுத்​தா​விட்​டால் உறவினர்​களுக்கு அவரது மார்​பிங் செய்​யப்​பட்ட ஆபாச புகைப்​படங்​களை அனுப்​பி, வாட்ஸ் அப் கால் மூல​மாக தொடர்ந்து மிரட்​டல் விடுக்​கின்​ற​னர்.

இதன் காரண​மாக ஒரு சில இடங்​களில் போலி செயலிகளில் கடன் பெற்ற தொழி​லா​ளர்​கள் அவமானம், மன உளைச்​சலுக்கு ஆளாகி தற்​கொலை செய்து கொள்​ளும் சம்​பவங்​களும் அண்​மைக்​கால​மாக திருப்​பூரில் அதிகரித்​துள்​ளன.

‘மிரட்டல் விடுத்தால் புகார் தெரிவிக்கலாம்’

திருப்பூர் சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது: தொழிலாளர்கள் செயலிகளில் கடன் பெறும்போது ரிசர்வ் வங்கியால் அந்த செயலி அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். கடன் பெறுபவரின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், எஸ்எம்எஸ், கேமரா, இருப்பிடம் போன்றவற்றுக்கான அனுமதியைக் கொடுக்கக்கூடாது.

போலி செயலி மூலமாக கடன் பெற்று மார்பிங் முறையில் ஆபாசமாக புகைப்படங்களைப் பதிவிடுவது, மிரட்டல் விடுவது, இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகியவற்றில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்தால் உடனடியாக தகுந்த ஆவணங்களுடன் சைபர் கிரைமில் புகார் அளிக்கலாம்.

அதனை விட்டுவிட்டு மன உளைச்சலால் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்கு கடன் பெற்ற நபர்கள் செல்லக்கூடாது. திருப்பூரில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் புகார் கொடுக்க பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லை.

ஆகவே,தொழிலாளர்கள் முடிந்தவரை ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள், வங்கிகள் மூலமாக நிபந்தனைகளை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே கடன் பெற வேண்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி போலி செயலிகளில் கடன் பெற்று ஏமாறக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போலி கடன் செயலிகளால் திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் பாதிப்பு
அரசுப் பேருந்துகளில் செல்போன்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும்: போக்குவரத்துத் துறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in