இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் திடீர் தடை - தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மாம்பழ ரகங்கள். (கோப்பு படம்)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மாம்பழ ரகங்கள். (கோப்பு படம்)

Updated on
1 min read

கிருஷ்ணகிரி: இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் திடீர் தடை விதித்துள்ளதால், மா விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலேயே, மா விவசாயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மை இடத்தில் உள்ளது. சுவை மிகுந்த ரகங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

இங்கிருந்து மாம்பழங்கள், மாங்கூழாகத் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேபோல் அல்போன்சா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட சில மாம்பழ ரகங்கள் தமிழகத்தில் இருந்து அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதனிடையே, இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் நாட்டு அரசு திடீரெனத் தடை விதித்துள்ளது. தற்போது மாம்பழ சீசன் காலம் என்பதால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 1 லட்சம் டன் அளவிலான மாம்பழ வகைகள் ஜப்பான், ஆஸ்திரேலியா, சவுதி மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இதில், ஜப்பானுக்கு அனுப்பப்படும் பழங்கள் அனைத்தும் 'வேப்பர் ஹீட் ட்ரீட்மென்ட்' எனப்படும் ஆவி வெப்பச் சிகிச்சை மூலம் சுத்தப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யும் ஆலைகள் சிலவற்றில் தங்களது சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, மாம்பழங்கள் இறக்குமதிக்கு ஜப்பான் நாடு திடீரென தடை விதித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தற்போது மாம்பழ சீசன் காலம் என்பதால், தமிழக மா விவசாயிகளுக்குப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும்.

ஏற்கெனவே, மாம்பழத்திற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள நிலையில், ஜப்பான் நாட்டின் இறக்குமதித் தடை என்பது எங்களுக்கு மேலும் சுமையைத் தருகிறது.

ஜப்பானைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாடாக இறக்குமதித் தடை விதிக்கும் முன்பு, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

சுகாதாரக் குறைபாடுள்ள ஆலைகளுக்கு மத்திய அரசு சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், என்றார்.

<div class="paragraphs"><p>கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மாம்பழ ரகங்கள். (கோப்பு படம்)</p></div>
டி.கே.சிவகுமாரின் ‘பவர்’ ஸ்டோரி! - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in