

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்த நாளையொட்டி, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு, காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஐரீன் சிந்தியா மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் காமராஜரின் எளிமை, நேர்மை, தொலைநோக்குப் பார்வை மற்றும் நாட்டுக்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற பொதுச் சேவை மகத்தானது.
கல்வி விரிவாக்கம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து, தமிழக கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர்.
அவரது லட்சியங்களை வழிகாட்டுதலாகக் கொண்டு, நிலையான வளர்ச்சி, செயல்திறன் மேம்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதில் காமராஜர் துறைமுக நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.
காமராஜர் துறைமுகம் கடந்த நிதியாண்டில், 49.08 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு, ரூ.1,280 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, ‘மாஸ்டர் பிளான் 2047’-ஐ தயாரித்துள்ளது.
இதன்மூலம், வரும் 2047-ம் ஆண்டுக்குள் 254.52 மில்லியன் டன் ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, கட்டமைப்புகளை உருவாக்குவது, சரக்கு கையாளும் திறன் விரிவாக்கம், சாலை, ரயில் உள்ளிட்ட பன்முக போக்குவரத்து இணைப்பு வலுப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.