

புதுடெல்லி: முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இண்டிகோ நிறுவனத்தில் நிலவி வரும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக அவர் இந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ நிறுவனத்தின் 2,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, சுமார் 1,800 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. விமானிகளுக்கான புதிய விதிமுறைகளால் போதுமான பணியாளர்களை ஒதுக்க முடியாததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இண்டிகோ நிறுவனத்திற்கு 22.20 கோடி ரூபாய் அபராதம் விதித்ததோடு, நீண்டகாலச் சீர்திருத்தங்களை உறுதி செய்ய 50 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தையும் கோரியது. மேலும், சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் விமானச் செயல்பாடுகளைச் சரியாகக் கண்காணிக்கவில்லை என்று கூறி அவருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் பீட்டர் எல்பர்ஸ் இன்று தனது சிஇஓ பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட இண்டிகோ நிர்வாகம், புதிய சிஇஓ நியமிக்கப்படும் வரை நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ராகுல் பாட்டியா இடைக்காலப் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவித்துள்ளது.
ராஜினாமா கடிதத்தில் எல்பர்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் அவர் இந்த பொறுப்பில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளொன்றுக்கு 2,200 விமானப் பயணங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம், 2025-ம் ஆண்டில் 124 மில்லியன் பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. ராகுல் பாட்டியா மீண்டும் தலைமைப் பொறுப்பிற்கு வருவது நிறுவனத்தின் செயல்பாட்டுத் தரத்தை மேம்படுத்தும் என்று அதன் வாரியத் தலைவர் விக்ரம் சிங் மேத்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.