

வாராணசி: நாட்டிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் கப்பல் சேவையை வாராணசியில் மத்திய அமைச்சர் சர்வானந்த சோனாவால் நேற்று தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் உள்நாட்டு நீர் வழித்தடங்களை நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, பசுமை எரிசக்தி பயன்பாடு, நகரங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுமக்களின் வசதி ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதன் மூலம் பயண நேரம் மற்றும் செலவு குறைந்து பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியில், கங்கை நதியில், கப்பல் சேவை நேற்று தொடங்கப்பட்டது. நமோ படித்துறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) தயாசங்கர் சிங், தயாசங்கர் மிஷ்ரா, ரவிந்திர ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய கப்பல் மற்றும் நீர்வழித்தடங்கள் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் கப்பல் சேவையை தொடங்கி வைத்த பின்னர் கூறியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல. உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் பசுமை எரிசக்தியை நோக்கி நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறி ஆகும்.
ஹைட்ரஜனில் இயங்கும் கப்பல்களை இயக்கும் சீனா, நார்வே, நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இப்போது இணைந்திருக்கிறது. இது பெருமைக்கு உரிய விஷயமாகும். இது நமது தொழில்நுட்பத் திறன்கள் எதிர்காலத்துக்கு தயாராக இருப்பதைக் காட்டுகிறது.
பிரதமரின் தொலை நோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தால்தான் இது சாத்தியமானது. ஒவ்வொரு துறையும் முன்னேறி வரும் வேகமும் அணுகு முறையும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உள்நாட்டு நீர்வழிகள் முக்கியப் பங்காற்றுவதற்கு வழிவகுத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.