புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே தடையற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுதி 11 சதவீதமும், இறக்குமதி 26 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஏப்ரல் - செப்டம்பர் 2026 காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 11.1% சதவீதம் அதிகரித்து, 50.81 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. அதேநேரத்தில், இதே காலகட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 26% உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 45.73 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்காவுக்கான ஏற்றுமதி தற்போது 50.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதேபோல், அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 25.66 பில்லியன் டாலரிலிருந்து 32.33 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
வரி தொடர்பான நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்ந்து விரிவடைந்து வருவதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
மேலும், அமெரிக்கா உடனான இந்தியாவின் சரக்கு வர்த்தக உபரி முந்தைய ஆண்டில் 20.07 பில்லியன் டாலராக இருந்த நிலையில் அது தற்போது 18.48 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதன்மூலம், இந்தியாவின் சரக்கு ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால், “இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் முன்னேறி வருகின்றன. நாம் சாதகமான நிலையில் இருக்கிறோம். இந்த ஒப்பந்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. எனவே, ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்து கையெழுத்திடுவோம்.
ஒட்டுமொத்த வரி கட்டமைப்பும் முறைப்படுத்தப்படும் போதுதான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும். அமெரிக்காவில் பிரிவு 301-ன் கீழ் வரி கட்டமைப்பை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்ற நாடுகளுடன் திறம்பட போட்டியிடுவதை உறுதி செய்ய, அமெரிக்கச் சந்தையில் முன்னுரிமையைப் பெற இந்தியா முயல்கிறது.
ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்யும்போது, அது இருதரப்பு சந்தைகளிலும் நுழைவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, குறிப்பிட்ட சந்தைகளில் முன்னுரிமை அடிப்படையிலான சந்தை அணுகலையும் வழங்குகிறது. தமது போட்டியாளர்களைக் காட்டிலும் இந்தியாவுக்குக் கிடைக்கக்கூடிய இந்த முன்னுரிமை சந்தை அணுகல், புதிய சுங்க வரி கட்டமைப்பின் ஒரு பகுதியாக அமையும்” என தெரிவித்தார்.