புதுடெல்லி: அமெரிக்காவின் இல்லினாய்ஸின் அரோரா பகுதியில் உள்ள ஒரு இந்து கோயிலை குறிவைத்து பெரும் துப்பாக்கிச்சூடு நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியாகி உள்ள செய்தி ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் அளித்துள்ள பதில், அவரது சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர், ‘இல்லினாய்ஸின் அரோரா பகுதியில் உள்ள ஒரு இந்து கோயிலை குறிவைத்து பெரும் துப்பாக்கிச்சூடு நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாக வெளியாகி உள்ள செய்திகளால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறை உட்பட இந்த சதித் திட்டத்தின் இந்து விரோத இனவெறி தன்மை கவலையளிக்கிறது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதையும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மீது அமெரிக்க அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
இந்தச் சம்பவம், அமெரிக்காவில் இனவெறி மற்றும் இந்திய வெறுப்பு அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இந்திய சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்ய அதிக விழிப்புணர்வு, சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை, உறுதியான நடவடிக்கை ஆகியவை தேவை.
இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரித்து காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவும், அவர்கள் தண்டிக்கப்படவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்படவும் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் எடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: அரோராவில் உள்ள இந்து கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு இந்துக்கள் அதிகம் கூடுவது வழக்கம். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கோயிலில் பெரும் துப்பாக்கிச்சூடு நடத்த 19 வயது அமெரிக்கரான அலெக்ஸாண்ட்ரோஸ் பாபோராகிஸ் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அறிந்திருந்த சக ஊழியர் ஒருவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், வீட்டில் ஏ.ஆர். ரக துப்பாக்கி, 300 தோட்டாக்கள், அவரது திட்டங்கள் குறித்த அறிக்கை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
வெள்ளையின மேலாதிக்கவாதியாக அடையாளம் காணப்பட்டுள்ள அவர், இந்திய, யூத, ஆப்ரிக்க அமெரிக்கர்களை அதிக அளவில் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.