

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய அந்நியச் செலாவணி சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.
இதுகுறித்து அந்நியச் செலாவணி சந்தை வட்டாரத்தினர் கூறுகையில், “நடப்பு 2025-ம் ஆண்டில் உலக நாடுகள் கரன்ஸிகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. முதல் முறையாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 90-க்கும் கீழ் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வரி விவகாரத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறிநிலை நீடித்து வருகிறது. அதன் தாக்கம் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது” என்றனர்.
முதலீடு வெளியேற்றம்: மிரே அசட் ஷேர்கான் நிறுவனத்தின் ஆய்வாளர் அனுஜ் சவுத்ரி கூறுகையில், “ அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு கணிசமான அளவில் வெளியேறி வருவது, சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால் ரூபாய் மதிப்பு நேற்றைய வர்த்தகத்தின்போது 90.30-க்கும் கீழ் சரிந்தது. இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உடன்பாடு குறித்த நிச்சயமற்ற தன்மையும் ரூபாய் மதிப்பில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது” என்றார்.
புதன்கிழமை காலை வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு முதல் முறையாக 90.30 வரை சரிந்தது. அதன்பிறகு வர்த்தகம் முடியும் நேரத்தில் ரூபாய் மதிப்பு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமையை விட 25 காசுகள் குறைந்து 90.21-ல் நிலைத்தது.
செவ்வாயன்று அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 43 காசுகள் வீழ்ச்சியடைந்து 89.96-ல் நிலைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.