

புதுடெல்லி: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் இறக்குமதி, ஏற்றுமதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அச்சுறுத்தியிருப்பதே இதற்கு காரணம். ஏனெனில், மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான முக்கிய கடல் பாதையாக ஹார்முஸ் ஜலசந்தி உள்ளது.
மத்திய கிழக்கில் 3 நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக, உலகளாவிய சரக்குகளுக்கான ஏற்றுமதி, இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் நமித் ஜோஷி கூறியதாவது: வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உறுப்பு நாடுகள் இந்திய மருந்து நிறுவனங்களின் மொத்த ஏற்றுமதியில் 5.58 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மேற்கு ஆசியா மற்றும் வடஆப்பிரிக்கா பிராந்தியத்திற்கான மருந்து ஏற்றுமதியின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் 1,749.6 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி, ஓமன், குவைத் மற்றும் ஏமன் போன்ற முக்கிய சந்தைகள் மலிவு விலையில், பொதுவான மருந்துகளை வாங்குவதற்கு இந்தியாவை பெரிதும் நம்பியுள்ளன. ஜோர்டான், குவைத் மற்றும் லிபியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளுக்கான ஏற்றுமதியும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் இந்திய மருந்து ஏற்று மதியை பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இரண்டிற்கும் சரக்கு வரியும் இரண்டு மடங்காகி உள்ளது. இவை, மருந்து ஏற்றுமதி நிறுவனங்களை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மார்ச் மாதத்தில் ஏற்றுமதிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டால், மருந்து தொழில்துறை 5,000 கோடி ரூபாய் வரை இழப்புகளை சந்திக்க நேரிடும்.
மருந்து ஏற்றுமதியாளர்களுக்கான சரக்கு நிவாரணம், மானியங்கள் மற்றும் தளவாட ஆதரவு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசின் உதவியால் மட்டுமே ஏற்படவிருக்கும் இழப்பு குறையும். இவ்வாறு நமித் ஜோஷி தெரிவித்துள்ளார்.