

புதுடெல்லி: அமெரிக்கா 30 நாள் அனுமதி அளித்துள்ளதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முழுமையாக முடங்கி உள்ளது. ஆசிய நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 80% இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.
குறிப்பாக இந்தியாவின் 50% கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெற்று வருகிறது. போர் காரணமாக ஜலசந்தியின் இருபுறமும் 3,200-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் ஒருவாரமாக நங்கூரமிட்டு உள்ளன.
இதில் பெரும்பாலானவை கச்சாஎண்ணெய் சரக்கு கப்பல்கள்ஆகும். சவுதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு எண்ணெய் வயல்கள் மீது ஈரான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்காரணமாக இரு நாடுகளும் தற்காலிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. இந்த காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்த சூழலில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 2 சரக்கு கப்பல்களில் கச்சா எண்ணெய் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரு சரக்கு கப்பல்களும் கிழக்கு ஆசியாவுக்கு செல்லாமல் இந்திய துறைமுகங்களை வந்தடைந்து உள்ளன. கடந்த 4-ம் தேதி ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது. இதில் 7,30,000 பேரல் கச்சா எண்ணெய் உள்ளது.
மற்றொரு ரஷ்ய கப்பல் நேற்று முன்தினம் கிழக்கு இந்தியாவில் உள்ள துறைமுகத்தை வந்தது. இதில் 7,00,000 பேரல் கச்சா எண்ணெய் உள்ளது. மேலும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பேரல்களுடன் சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த 3-வது ரஷ்ய சரக்கு கப்பலும் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இந்த கப்பல் விரைவில் இந்திய துறைமுகத்தை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் ரஷ்யாவில் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய் சரக்கு கப்பல்கள் இந்தியாவை வந்து சேர உள்ளன.
இந்த கச்சா எண்ணெய் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும். மேலும் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க நிதித் துறை அமைச்சர் ஸ்காட்பெசன்ட் நேற்று வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்ப தாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தாராளமாக கிடைக்க ஏதுவாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க 30 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த குறுகிய கால அனுமதியால் ரஷ்ய அரசுக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஆதாயம் கிடைக்காது. தற்போது சர்வதேசகச்சா எண்ணெய் போக்குவரத்தை ஈரான் முடக்கியிருக்கிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. வரும் காலத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.