

புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து நீடிக்கும் போர் காரணமாக, ஹார்முஸ் நீரிணை பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை பன் மடங்கு உயர்ந்து வருகிறது.
இது அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய கிழக்கில் நடைபெறும் இந்த போர் பதற்றம் காரணமாக, இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ரூ.75 ஆயிரம் கோடி முதல் ரூ.92 ஆயிரம் கோடி வரை பாதிப்பை சந்திக்கக்கூடும் என்று ஏற்றுமதியாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல் ஏற்கெனவே ஆர்டர்கள், கப்பல் கட்டணம் மற்றும் சரக்கு நகர்வுகளை பாதித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த இடையூறுகள் தொடர்ந்தால், மார்ச் மாத ஏற்றுமதியிலும், ஒட்டு மொத்த 2026 நிதியாண்டின் ஏற்றுமதி புள்ளி விவரங்களிலும் இதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரியும் என்று தொழில் துறை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சரக்கு போக்குவரத்து செலவு கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், கப்பல் நிறுவனங்கள் ஒரு ஷிப்மெண்டுக்கு ரூ.1.38 லட்சம் முதல் முதல் ரூ.3.69 லட்சம் வரை கூடுதல் கட்டணம் விதிப்பதாகவும் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.