

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 25% வரியுடன், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் 25% அபராத வரி என மொத்தம் 50% வரி விதித்து அமெரிக்கா. இதனிடையே, இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
அமெரிக்காவின் வேளாண் மற்றும் பால் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஒப்பந்தம் தாமதமாகி வந்தது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதால், இந்தியா மீதான வர்த்தக வரி 18% ஆகக் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பு வர்த்தகம் 500 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்த விவரங்களை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசும்போது, “அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தத்தால் இரு தரப்புக்கும் அதிகபட்ச பலன் கிடைக்கும். அதேநேரம் விவசாயிகள் நலனை பாதிக்கும் எந்த அம்சமும் ஒப்பந்தத்தில் இடம்பெறாது” என்றார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்றும் இதே பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். இந்நிலையில், வளைகுடா நாடுகளுடனான குறிப்பு விதிகள் கையெழுத்திடும் நிகழ்வில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று பங்கேற்றார்.
அப்போது அவர் கூறும்போது, “இந்தியா, அமெரிக்கா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அடுத்த 5 நாட்களுக்குள் கூட்டறிக்கை வெளியிடப்படும். இதன் அடிப்படையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 18% ஆக குறைப்பது தொடர்பான நிர்வாக உத்தரவை அமெரிக்கா பிறப்பிக்கும். இதையடுத்து, இறுதி ஒப்பந்தம் மார்ச் மாத மத்தியில் கையெழுத்தாகும்” என்றார்.