இந்தியாவில் விலை குறையும் பொருட்கள் எவை? - ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தாக்கம்

சொகுசு கார், ஒயின், மொபைல் போன் மற்றும் பல...
இந்தியாவில் விலை குறையும் பொருட்கள் எவை? - ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தாக்கம்
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் அதனால் இந்தியாவில் விலை குறையும் பொருட்கள் குறித்து பார்ப்போம்.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டே கையெழுத்தாகும் என நம்புதாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் தொடர்பான சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு இது அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? எந்தெந்த பொருட்களுக்கான விலை குறையும்? எந்தெந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியா ஆதாயம் அடையும் என்பது குறித்து பார்க்கலாம்.

மெர்சிடிஸ், ஆடி கார்களின் விலை குறையும்: ஐரோப்பிய தயாரிப்புகளான மெர்சிடிஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ கார்களுக்கான இறக்குமதி வரி 100%-க்கும் அதிகமாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, 15,000 யூரோக்களுக்கு (சுமார் ரூ.16 லட்சம்) அதிகமான விலை கொண்ட ஆடம்பர கார்களுக்கான வரி 40% ஆக குறையும். அதோடு, மேலும் 10 சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், இத்தகைய கார்களின் விலை கணிசமாகக் குறையும்.

இந்தியாவில் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சிறிய கார்களே சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியாவின் உள்நாட்டு நிறுவனங்கள் இவற்றை பெருமளவில் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த சந்தைக்கு போட்டி இல்லாத வகையில், ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலை கொண்ட கார்களை ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யாது. அதேபோல, குறைந்த விலை கொண்ட கார்களை இந்திய உற்பத்தியாளர்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என ஒப்பந்தம் முடிவாகி உள்ளதாக வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறையும் ஒயின் விலை: பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயினின் விலை குறையும். இந்த ஒயின்களுக்கு இந்தியா தற்போது 150% வரி விதிக்கிறது. புதிய ஒப்பந்த்தின்படி, இந்த வரி 20% ஆக குறைக்கப்படும். இதனால், ஐரோப்பிய ஒயின்களின் விலை இந்தியாவில் கனிமாகக் குறையும். அதேநேரத்தில், 2.5 யூரோக்களுக்கு குறைவான விலை கொண்ட ஒயின்களுக்கு இந்தியாவில் வரிச்சலுகை கிடையாது. உள்ளூர் உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மருந்துகளின் விலை குறையும்: நவீன சுகாதார தொழில்நுட்பங்களுக்குப் பெயர் பெற்றது ஐரோப்பா. இங்கு உற்பத்தி செய்யப்படும் சுகாதார கருவிகள், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கான மருந்துகளின் விலை இந்தியாவில் குறையும். இதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் ஐரோப்பாவின் 27 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ப அதன் சந்தை இந்திய மருத்து உற்பத்தியாளர்களுக்காக திறக்கப்படும்.

மின்னணு மற்றும் உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள்: ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விமான உதிரி பாகங்கள், மொபைல் போன்கள், உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறையும். இதனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுப் பொருட்களின் விலை குறையும். இது நுகர்வோர்களுக்கு பயன் அளிக்கும்.

எஃகு மற்றும் ரசாயனப் பொருட்கள்: இரும்பு, எஃகு, ரசாயனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை முழுமையாக நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படும். இதனால், கட்டுமானம், தொழில் துறைகளில் மூலப் பொருட்களின் விலை குறையும். வீடு வாங்குபவர்கள் உள்ளிட்டோர் இதனால் பயனடைவார்கள். இதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடை, தோல் மற்றும் நகைகள் ஐரோப்பிய சந்தைகளை எட்டும்.

இந்தியாவில் விலை குறையும் பொருட்கள் எவை? - ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தாக்கம்
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே இறுதியானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in