

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து ரூ.10,000 கோடிக்கு 288 எஸ்-400 ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது ஆதம்பூர் மற்றும் புஜ் பகுதிகளில் எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் நிலை நிறுத்தப்பட்டன. இதிலிருந்து பல இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் நீண்டதூரம் சீறிப் பாய்ந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தின. இந்திய எல்லையில் இருந்து 314 கி.மீ தூரத்தில் வந்த பாகிஸ்தான் போர் விமானத்தையும், எஸ்-400 ஏவுகணை துல்லியமாக தாக்கியது.
அப்போது எஸ்-400 மற்றும் பன்ட்சிர் ஏவுகணைகள் இணைந்து இரட்டை அடுக்கு வான் பாதுகாப்பை அளித்தன. பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களுடன் வந்த ட்ரோன்கள் மற்றும் கமிக்கேஸ் ட்ரோன்களை எல்லாம் ரஷ்ய ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தின. இதனால் ரஷ்ய ஏவுகணைகள் அதிகளவில் தேவை என பாதுகாப்பு படைகள் விருப்பம் தெரிவித்தன.
இந்த தேவைகளை பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் ஏற்றுக்கொண்டு ரூ.10,000 கோடி மதிப்பில் 288 எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்முதலை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளபடி மேலும் 2 எஸ்-400 ஏவுகணைகள் யூனிட் இந்தாண்டு ஜுன் மற்றும் நவம்பரில் விநியோகம் செய்யப்படவுள்ளன. மொத்தம் ரூ.3.60 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தரைப்படை பயன்பாட்டுக்காக டேங்குகளை தகர்க்கும் கண்ணிவெடிகள் (விபாவ்), கவச வாகனங்கள், டி-72 டேங்குகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. கடற்படை பயன்பாட்டுக்காக 4 மெகா வாட் கேஸ் டர்பைன் - எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் மற்றும் பி-81 கண்காணிப்பு விமானம் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.