

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக 3,250 முறை பாத யாத்திரை சென்று அசத்தியுள்ளார் 71 வயது முதியவர் ஒருவர்.
திருப்பதியை சேர்ந்தவர் வெங்கடரமண மூர்த்தி (71). இவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியாற்றி 2014-ல் ஓய்வு பெற்றவர். ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், பணியில் இருக்கும்போதே வாரம் ஒருமுறை விடுமுறை நாளில் திருமலைக்கு வாரி மெட்டு மார்கமாக நடந்து சென்று சுவாமியை தரிசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பின்னர் இதனையே அவர் ஒவ்வொரு வாரமும் கடைபிடிக்க தொடங்கினார். இதுவரை தனது வாழ்நாளில் திருப்பதி ஏழுமலையானை 3,460 முறை தரிசித்துள்ளார். இதில், 3,250 முறை மலையேறி நடந்தே சென்று சுவாமியை தரிசித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கடரமண மூர்த்தி கூறும்போது: நான் பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வருகிறேன். வாரி மெட்டு மார்கமாக 2388 படிகள் ஏறிச் செல்வதையே நான் வழக்கமாக கொண்டுள்ளேன். இதற்கு அவர் மீதுள்ள அளவு கடந்த பக்தியே காரணம்.
வேலையில் இருக்கும்போதே திருமலைக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஓய்வு பெற்ற பின்னர் குறைந்தபட்சம் வாரத்திற்கு 4 முறையாவது திருமலைக்கு மலையேறி செல்கிறேன்.
கோவிந்தா... கோவிந்தா… என மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஒன்றறை மணி நேரத்தில் மலையேறி விடுவேன். இந்த வயதிலும் இவ்வளவு சக்தி எவ்வாறு வந்தது? என கேட்கிறார்கள். எல்லாம் அந்த வெங்கடேச பெருமாளின் கருணை. ஆரோக்கியத்தை காப்பதே நமது கடமை. ஆயுள் கொடுப்பது அவனின் கருணை. இவ்வாறு வெங்கடரமண மூர்த்தி கூறினார்.