

பல்லடம் பகுதியில் உள்ள கிடங்குகளில் தேக்கிவைக்கப் பட்டுள்ள காடா துணிகள்.
திருப்பூர்: நூல் விலை உயர்வு, ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக திருப்பூரை அடுத்த பல்லடம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.200 கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், தெக்கலூர், மங்கலம், கோவை மாவட்டம் சோமனூர், கருமத்தம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2.50 லட்சம் விதைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் 2 கோடி மீட்டர் அளவுக்கு காடா துணிகள் உற்பத்தியாகின்றன.
இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். குறிப்பாக ஜவுளித் தொழிலில் விசைத்தறி துணி உற்பத்தி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. விசைத்தறி ஜவுளித் துணி உற்பத்தியில் இந்திய அளவில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளன.
தமிழ்நாட்டில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடைபெற்றாலும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது.
இந்நிலையில், நூல் விலை உயர்வு, பஞ்சு ஏற்றுமதி, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது என பல்வேறு பிரச்சினைகளால் விசைத்தறி ஜவுளித்தொழில் நலிவடைந்து வருகிறது.
இதுகுறித்து பல்லடத்தைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மேற்கு ஆசிய போர் காரணமாக கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கெனவே அனுப்பிய சரக்குகளும் வாங்கியவர்களை சென்றடையவில்லை.
அதேபோல், நூல் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்லடம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.200 கோடி அளவுக்கு காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் காடா துணி உற்பத்தி 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
துணிகள் தேக்கமடைந்துள்ளதாலும், சரக்கு கப்பல்களில் கோடிக்கணக்கான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளதாலும் காடா துணிகளுக்கு போதிய அளவு விலை கிடைப்பதில்லை. ஆகவே, சரக்கு கப்பல் போக்குவரத்து சீரடைந்து நூல் விலை குறைந்தால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம், என்றனர்.
பல்லடம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் கூறியதாவது: காடா துணிகள் உற்பத்தி 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, போர் முடிவுக்கு வந்து சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டால் உற்பத்தியை அதிகரிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதுவரை தொழிலாளர்களுக்கு ஒரு ஷிப்ட் மட்டுமே வேலை வழங்கப்படும் என்பதால் இந்தத் தொழில் தற்போது தேக்கநிலையை சந்தித்துள்ளது, என்றனர்.
- ஆர்.தர்மலிங்கம்