

மும்பை: ரஷ்ய வர்த்தகக் கூட்டாளி நிறுவனங்கள் தங்களிடம் உபரியாக உள்ள இந்திய ரூபாயை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது. உலக நாடுகள் சர்வதேச வர்த்தகத்துக்காக அமெரிக்க டாலரை பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், அமெரிக்க டாலர் மீதான சார்பைக் குறைப்பதற்கு சில நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவும் ரஷ்யாவும் இருதரப்பு வர்த்தகத்துக்கு தங்கள் சொந்த நாட்டு நாணயங்களை (ரூபாய் மற்றும் ரூபிள்) பயன்படுத்தி வருகின்றன.
அதேநேரம், ரஷ்யாவுக்கான ஏற்றுமதி மதிப்பைவிட கூடுதலான மதிப்புக்கு இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால் ரஷ்ய வர்த்தக நிறுவனங்களிடம் இந்திய ரூபாய் அதிக அளவில் குவிந்து வருகிறது. இதை வேறு நாடுகளுடனான வர்த்தகத்துக்கு பயன்படுத்த முடியவில்லை.
இதையடுத்து, ரஷ்ய வர்த்தகர்கள், வங்கிகளிடம் உள்ள உபரி ரூபாய் இருப்புகளை இந்திய அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு அனுமதித்தது. ஆனாலும், ரஷ்ய வர்த்தக நிறுவனங்களிடம் இந்திய ரூபாய் அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ரஷ்யா-இந்தியா மன்ற கூட்டத்தில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணித் துறையின் தலைமைப் பொது மேலாளர் என்.செந்தில் குமார் பேசியதாவது: ரஷ்யக் கூட்டாளி நிறுவனங்களால் திரட்டப்பட்ட இந்திய ரூபாயை, அவர்களின் இறக்குமதிக்கான பணத்தை செலுத்துவதற்கோ அல்லது இந்தியாவில் மூலதன முதலீடுகளைச் செய்வதற்கோ பயன்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை வழங்குவது பற்றி ரிசர்வ் வங்கி ஆராய்ந்து வருகிறது.
ஏற்றுமதியாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு ஒருவித நம்பிக்கை வர வேண்டும், இது இந்திய ரூபாயில் நடக்கும் பரிவர்த்தனைகளின் அளவை அதிகரிக்க உதவும். பரிவர்த்தனைகளைச் செய்யாதவரை, சந்தை உருவாக முடியாது. எனவே, நாம் தொடர்ந்து பரிவர்த்தனைகளைச் செய்யும்போது, ரூபாய்-ரூபிள் பரிவர்த்தனைகளைச் செய்வதில் அதிக ஆர்வம் இருப்பதை நாம் காணும்போது, சந்தை உருவாவதை நாம் காண்போம். இவ்வாறு அவர் கூறினார்.