

புதுடெல்லி: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் வீடு விற்பனை 15% அதிகரித்துள்ளதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.
ரியல் எஸ்டேட் ஆலோசனை வழங்கும் பிராப்டைகர்.காம், நாட்டின் முக்கிய 8 நகரங்களில் புதிய வீடுகள் விற்பனை தொடர்பான புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: கடந்த 2025ம் ஆண்டில் 8 நகரங்களில் ஒட்டுமொத்தமாக 3,86,365 புதிய வீடுகள் விற்பனை ஆனது. இது 2024ம் ஆண்டின் 4,36,992-ஐவிட 12% குறைவு. இதில் மும்பையில் 26%, டெல்லியில் 13%, புனே நகரில் 12% மற்றும் அகமதாபாத்தில் 12% வீடு விற்பனை குறைந்துள்ளது.
அதேநேரம், சென்னையில் 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது புதிய வீடு விற்பனை 55% அதிகரித்து 24,892 ஆகி உள்ளது. இதுபோல ஹைதராபாத்தில் 6%, பெங்களூருவில் 13%, கொல்கத்தாவில் 12% விற்பனை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பிராப்டைகர்.காம் இணையத்தை நிர்வகிக்கும் அவுரம் ப்ராப்டெக் நிறுவன செயல் இயக்குநர் ஓங்கார் ஷெட்டி கூறும்போது, “2025-ல் வீடுகளுக்கான தேவை முற்றிலும் குறைந்துவிடவில்லை. மாறாக அது ஒரு மறுசீரமைப்புக்கான ஆண்டாகும். வாங்குபவர்கள் தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருந்தனர். ஆனால் முடிவுகளை எடுப்பதில் மிகவும் நிதானமாக செயல்பட்டனர்.
அதே வேளையில், கட்டுமான நிறுவனங்கள் விநியோக நிர்வாகத்தை மிகுந்த ஒழுங்குடன் கையாண்டன. இது தேக்க நிலை ஏற்படாமல் தடுத்ததுடன், விற்பனை அளவு குறைந்த போதிலும் விலை குறையாமல் உறுதியுடன் இருக்க உதவியது. நகரங்களுக்கு இடையே, 3 தென்னிந்திய நகரங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன" என்றார்.