

சென்னை: கிராமப்புறங்களில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளிடையே ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் உன்னதத் திட்டத்திற்காக, சென்னையைச் சேர்ந்த ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனையின் பொதுத் தொண்டு நிறுவனமான குருப்ரியா விஷன் ரிசர்ச் ஃபவுண்டேஷன், இந்த ஆண்டிற்கான பத்தாவது ஹெச்.சி.எல் டெக் கிராண்ட் நிதியை (HCL Tech Grant) வென்றுள்ளது.
கிராமப்புற டெலி-ஆப்தல்மாலஜி திட்டம் என்ற பெயரிலான ‘விஷன் ஆன் வீல்ஸ்’ திட்டம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு, நேரில் சென்று குறைப்பிரசவ குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு கண் பரிசோதனை செய்து பார்வைக் குறைபாடு சிக்கலில் இருந்து விடுவிக்கும் திட்டம் ஆகும்.
இது முழுமையாக எவ்வித கட்டணம் இன்றி இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ சேவை. இந்த சேவைக்கான அங்கீகாரமாக சமீபத்தில் புது டெல்லியில் உள்ள இந்தியா ஹேபிடேட் சென்டரில் நடைபெற்ற ஹெச்சிஎல் நடத்திய விழாவில் குருப்ரியா விஷன் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் டாக்டர். வசுமதி வேதாந்தம், அறங்காவலர் டாக்டர். பிரவீன் கிருஷ்ணா, மற்றும் கௌரவ ஆலோசகர் மாதவன் ஆகியோர், ஹெச்.சி.எல் டெக் கிராண்ட் நடுவர் குழு உறுப்பினர்களிடமிருந்து இந்த பெருமை மிகு நிதிக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.
பச்சிளம் குழந்தைகளுக்கு கண் பார்வை தரும் இந்த சேவையின் பயணம் 365 கி.மீ. வரை தொடர்கிறது என்று இந்த வெற்றியின் பின்னணி குறித்து விவரித்தார் ராதாத்ரி நேத்ராலயாவின் மருத்துவ இயக்குநர் டாக்டர். பிரவீன் கிருஷ்ணா, “எங்கள் ‘விஷன் ஆன் வீல்ஸ்’ திட்டத்தின் மூலம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கிராமப்புறங்களில் உள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோரின் குறைப்பிரசவ குழந்தைகளிடையே காணப்படும் ‘ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி’ (ROP - Retinopathy of Prematurity) என்ற கண்பார்வையைப் பறிக்கும் ஆபத்தை எங்கள் மருத்துவ குழு மூலம் பரிசோதித்தோம். ROP இருப்பதாக கண்டறியப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் உடனடியாக ராதாத்ரி நேத்ராலயாவுக்கு அழைத்து வரப்பட்டு, பார்வையைப் பாதுகாக்கும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “இந்தக் குழந்தைகளைப் பரிசோதிக்க, எங்கள் குழு சென்னைக்கு அப்பால் 365 கி.மீ. தூரம் வரை தொடர்ந்து பயணிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
ராதாத்ரி நேத்ராலயாவின் மருத்துவ இயக்குநரான டாக்டர். வசுமதி வேதாந்தம் இது குறித்து பேசுகையில், “இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் அதிகமுள்ள நாடுகளில், குழந்தைப் பருவத்தில் பார்வை இழப்புக்கு மிகவும் பொதுவான காரணம் ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி’ (ROP - Retinopathy of Prematurity) - ROP.
இந்தியாவில் மொத்தமாகவே குழந்தைகளுக்கான ரெட்டினா நிபுணர்கள் 150 பேர் மட்டுமே உள்ளனர். ஆனால், ROP என்பது முக்கியமாகக் கிராமப்புறப் பகுதிகளில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எனவே, கிராமங்களில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பரிசோதிக்க, டெலி-ஆப்தல்மாலஜி மற்றும் கையில் பிடித்துச் செயல்படக்கூடிய ரெட்டினா கேமராக்கள் போன்ற கருவிகள் மிக அவசியம்.
எங்கள் இலவச கிராமப்புற டெலி-ஆப்தல்மாலஜி திட்டம் மூலம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள 1,50,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண்பார்வை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 5000-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் லேசர், ஊசிகள் மற்றும் பொது மயக்க மருந்துடன் கூடிய விட்ரெக்டமி அறுவை சிகிச்சைகள் வழங்கப்பட்டு, பார்வை இழப்பிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
கண் பார்வையின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்த ஒன்று. பச்சிளம் குழந்தைகளை குறிப்பாக குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும் ROP எனப்படும் ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி என்ற குறைப்பாட்டை நீக்கி பார்வையை பாதுகாக்கும் இந்த சேவை பெரும் பாராட்டுக்குறியது. நம் நாட்டின் கிராமப்புற பகுதிகளில் இந்த சேவை அதிகமாக நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்து இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
டாக்டர். வசுமதி வேதாந்தம் (நிர்வாக அறங்காவலர்), டாக்டர். பிரவீன் கிருஷ்ணா (அறங்காவலர்) மற்றும் மாதவன் (கௌரவ ஆலோசகர்) ஆகியோர் ஹெச்சிஎல் டெக் கிராண்ட் நடுவர் குழு உறுப்பினர்களான சுரேஷ் நாராயணன் மற்றும் பி.எஸ். பஸ்வான் ஆகியோரிடமிருந்து புது டெல்லியில் உள்ள இந்தியா ஹேபிடேட் சென்டரில் ஹெச்.சி.எல் டெக் கிராண்ட் நிதியைப் பெற்றனர்.