

பெங்களூரு: குரோ நிறுவனம் ஐபிஓ வெளியான நிலையில் அதன் சிஇஓ பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம், லெபா என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்தவர் லலித் கேஷர் (44). சிறு வயதிலேயே சுட்டியாக விளங்கிய தனது மகனுக்கு சிறந்த கல்வியை வழங்க அவரது பெற்றோர் விரும்பினர். ஆனால், அங்கு ஆங்கிலப் பள்ளிகளே இல்லை.
இதையடுத்து, கார்கோன் நகரில் உள்ள தங்கள் பெற்றோர் வீட்டில் லலித்தை தங்கவைத்து படிக்க வைத்தனர். படிப்பில் சிறந்து விளங்கிய லலித், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று மும்பை ஐஐடியில் படித்தார். முதுகலை படிப்பையும் அங்கேயே முடித்த அவர், 2011-ல் எஜுபிளிக்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் 2013-ம் ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக வேலைக்கு சேர்ந்தார்.
பின்னர் லலித் கேஷர், ஹர்ஷ் ஜெயின், இஷான் பன்சால் மற்றும் நீரஜ் சிங் ஆகிய 4 பேரும் இணைந்து, பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு பில்லியன்பிரெய்ன்ஸ் காரேஜ் வென்ச்சர்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினர்.
இதன் மூலம், ‘குரோ’ என்ற பெயரில் ஒரு செயலியை அறிமுகம் செய்தனர். இப்போது சில்லறை முதலீட்டுக்கான நாட்டின் முன்னணி டிஜிட்டல் செயலியாக குரோ செயலி உருவெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், பில்லியன்பிரெய்ன்ஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய பங்குகளை (ஐபிஓ) வெளியிட்டது. இது கடந்த 12-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஒரு பங்கின் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.
இதில், இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான லலித் கேஷர் 9.06% பங்குகளை (55.91 கோடி பங்குகள்) வைத்துள்ளார். இதன்மூலம் அவருடைய பங்குகளின் மதிப்பு 1 பில்லியன் டாலரை (ரூ.9 ஆயிரம் கோடி) தாண்டி விட்டது. இதன்மூலம் பில்லியனர் பட்டியலில் லலித் இணைந்துள்ளார்.