தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? - மத்திய அரசு சொல்வது என்ன?

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? - மத்திய அரசு சொல்வது என்ன?
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 29) நடக்க உள்ள நிலையில், அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், தேர்தல் முடிந்தவுடன் எரிபொருள் விலை உயர்த்தப்படலாம் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதன் காரணமாக, ஆந்திர் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பத் தொடங்கினர்.

இதன் காரணமாக சுமார் 400-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், மத்திய அரசு தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. பொதுமக்கள் வதந்திகளை நம்பி தேவையற்ற முறையில் பீதி அடைந்து எரிபொருளைச் சேமிக்க வேண்டாம். நாட்டில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் இருப்பு உள்ளது,” என்று தெரிவித்தார். மேலும், எரிபொருள் விநியோகத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தியாவில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 114 டாலராக உயர்ந்துள்ளதால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் ரூ.2,400 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.20-ம், டீசலில் ரூ.100-ம் இழப்பு ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல், குறிப்பாக ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? - மத்திய அரசு சொல்வது என்ன?
வெப்ப அலை பாதிப்பு: மக்களை காக்க மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in