வெப்ப அலை பாதிப்பு: மக்களை காக்க மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

21 மாநில அரசுகளுக்கு கடிதம்
வெப்ப அலை பாதிப்பு: மக்களை காக்க மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: வெப்ப அலை பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆந்திரப் பிரதேசம், அசாம், பிஹார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 21 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தின் விவரம்: நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிவாரண மதிப்பீடுகளை 21 மாநில அரசுகள் மற்றும் டெல்லி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

வெப்ப அலைகளின் தீவிரம், காலஅளவு, அடிக்கடி உயர்ந்து வரும் அதன் தாக்கம், விளிம்பு நிலை மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரிவினர், திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்குமிட வசதியில்லாத வீடற்ற மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது.

கடும் வெப்பம் காரணமாக மூத்த குடிமக்கள், சிறார்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. கூடுதலாக, வெப்ப அலைகளின் தாக்கம் காரணமாக வாழ்வாதார இழப்புகளுடன், தீ விபத்து போன்ற அபாயங்களும் அதிகரித்துள்ளன.

எனவே, வெப்ப அலைகளில் இருந்து மக்களைக் காக்க அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. 2019-23-ம் ஆண்டுகளுக்கு இடையே சன்ஸ்ட்ரோக் அதாவது கடும் வெப்பம் காரணமாக 3,712 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

கடும் வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கும், இதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அல்லது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையான செயல்பாட்டு முறையின்படி, நிவாரண நடவடிக்கைகளை எவ்வித இடையூறுமின்றி உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட நிர்வாகத்திடமிருந்து வெப்ப அலைகளால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒட்டுமொத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை பாதிப்பு: மக்களை காக்க மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்
குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: அலுவலக உதவியாளர் வெற்றி; முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தோல்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in