

சென்னை: கடந்த 11 மாதங்களுக்கு பிறகு, தங்கத்தின் விலை நேற்று ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.99 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 8 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.6,280 வரை சரிந்துள்ளது.
பொதுவாக தங்கம் விலை, சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச்சில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தையும், அதே ஆண்டு மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.60 ஆயிரத்தையும், அக்டோபரில் ரூ.97 ஆயிரத்தையும், டிசம்பர் 15-ல் ரூ.1 லட்சத்தையும் தாண்டியது.
நடப்பாண்டில் ஜனவரி 29-ல் தங்கம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-ஐ தொட்டு, புதிய உச்சத்தை எட்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது.
இதற்கிடையில், கடந்த 10-ம் தேதி முதல், தங்கத்தின் விலை குறைந்து வந்தது. நவம்பர் 9-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 40 ஆக இருந்தது. இதன்பிறகு படிப்படியாக குறைந்து, நேற்று ரூ.1 லட்சத்துக்கு கீழ் இறங்கியது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.99 ஆயிரத்து 760-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து, ரூ.12 ஆயிரத்து 470-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 832 ஆக இருந்தது. கடந்த 8 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.6,280 குறைந்துள்ளது.
அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.190 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரமாகவும் இருந்தது.
குறைவுக்கு என்ன காரணம்?
அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளதால், பிற நாட்டு முதலீட்டாளர்களுக்குத் தங்கம் வாங்குவது அதிக செலவாக மாறி, அதன் தேவை குறைந்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பாண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. உச்ச விலையில் தங்கத்தை வைத்திருந்த முதலீட்டாளர்கள் லாபத்துக்காக விற்பனை செய்வதும் விலை சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அமெரிக்கா ஃபெடரல் வங்கி வட்டி விகித்தை உயர்த்த போவதாக நிலவும் அதிக எதிர்பார்ப்பு, அமெரிக்க டாலர் வலிமையாகி வருவது, அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவது ஆகியவை தங்கத்தின் விலை சரிவுக்கு முக்கியக்காரணம். வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா என்பது சந்தேகமே. ஆனாலும், பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம்” என்றார்.