

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 சரிந்தது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றமும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இன்று (பிப்.20) காலை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,420-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,15,360-க்கு விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,25,848-க்கும், 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.98,800-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை ஆகிறது.