சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச்.2) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.920 என விலை குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 என விலை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் மேற்கொண்டுள்ள கூட்டுத் தாக்குதல் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (மார்ச் 2) காலை வர்த்தகம் தொடங்கியதும் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்தது. இந்தச் சூழலில் தங்கம் விலை குறைந்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,660-க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,25,280-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.315-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.3,15,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.