தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை: பவுன் ரூ.92,080-க்கு விற்பனை

இன்று ஒரே நாளில் ரூ.3,760 சரிவு
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை: பவுன் ரூ.92,080-க்கு விற்பனை
Updated on: 
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 20) சில்லரை விற்பனைச் சந்தையில் மீண்டும் அதிரடியாக குறைந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.470 குறைந்து ரூ.11,510 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.3,760 குறைந்து ரூ.92,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ரூ.14,000 வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேசப் பொருளாதாரச் சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக நிலவும் அதிக எதிர்பார்ப்பு, வலுவடைந்து வரும் அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் அதிக வட்டி தரும் அரசுப் பத்திரங்களில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை மாற்றுவது ஆகிய காரணங்களால், கடந்த நவம்பர் 9-ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, 11 மாதங்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 17-ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்திற்குக் கீழ் (ரூ.99,760) இறங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் தங்கம் விலை கணிசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

குறிப்பாக, நேற்றைய வர்த்தக முடிவில் சவரன் ரூ.95,840-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.3,760 சரிந்து ரூ.92,080 என்ற நிலையை எட்டியுள்ளது.

அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைந்து, ஒரு கிராம் ரூ.12,556 என்ற அளவிலும், ஒரு சவரன் ரூ.1,00,448 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9,417 ஆகவும், ஒரு சவரன் ரூ.75,336 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.180 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நவம்பர் 11-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000-க்கு விற்பனையான நிலையில், கடந்த 10 நாட்களில் கிலோவுக்கு ரூ.20,000 வரை சரிந்துள்ளது.

தொடர் விலை வீழ்ச்சி காரணமாக, திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு இது ஒரு சாதகமான தருணமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலைகளில் ஏற்ற இறக்கங்கள் நீடிப்பதால், தனிநபர்கள் தங்களது முதலீடுகளைத் தேர்ந்த பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னர் மேற்கொள்வதே நலம் பயக்கும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை: பவுன் ரூ.92,080-க்கு விற்பனை
குறையும் தங்கம் விலையும், முதலீட்டு யோசனைகளும் - ஒரு தெளிவுப் பார்வை

X