

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.4,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,15,320-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. டிச.15-ம் தேதி முதல் முறையாக ஒரு பவுன் ரூ.1 லட்சத்தைத் தாண்டி விற்பனையானது.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் விலை ஏறிய தங்கம், நேற்று முன்தினம் ரூ.1.11 லட்சத்தைக் கடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து, கிராம் ஒன்றுக்கு ரூ. 515 உயர்ந்து ரூ.14,415-க்கும், பவுனுக்கு ரூ.4,120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15,320-க்கும் விற்பனையாகி புதிய வரலாறு படைத்துள்ளது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 25,800-க்கு விற்கப்பட்டது. கடந்த 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு சுமார் ரூ.9,480 வரை விலை கூடியுள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்தது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.345-க்கு விற்கப்பட்டது.