

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று ஆய்வு செய்தார். உடன், பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்.
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் பாமக, அமமுகவும் கைக்கோத்துள்ளன. கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நாளை 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.
நாளை பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 23-ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் தி.சினேகா உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழா நடைபெறும் இடம் மற்றும் பிரதமர் செல்லும் பாதைகளில் 5 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சுமார் 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோப்ப நாய் சோதனை மற்றும் மெட்டல் டிடெக்டர் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுராந்தக்தில் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் கூறியதாவது:
ஊழல் நிறைந்த மற்றும் இந்துக்களுக்கு எதிரான இந்த திமுக அரசு, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா மீது பதிவு செய்த எப்ஐஆர்-ஐ சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமித் மாளவியா உண்மையைத்தான் பேசினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒரு தெளிவான உறுதிப்பாடாகும்.
திமுக அரசும், உதயநிதி ஸ்டாலினும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும், அவர்களுடைய ஒட்டுமொத்தப் பாரம்பரியமே இந்துக்களுக்கு எதிரானது என்றும் உயர் நீதிமன்றமும் தெளிவாகத் தெரி வித்துள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்துக்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் ஒரு குடும்பத்தில் இருந்தும், கட்சியில் இருந்தும் வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின்.
வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், வெறுப்புப் பேச்சை பேசியவர் விடுவிக்கப்பட்டார். அதை சுட்டிக் காட்டியவர் இந்த இந்து எதிர்ப்பு அரசால் தண்டிக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது வெறுப்புப் பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள வலுவான கண்டனம் மற்றும் வலுவான தீர்ப்புக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் நீடிப்பது முறையல்ல. அவர் உடனடியாக மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவரது வெறுப்புப் பேச்சுக்காகவும், சாதி, சமூகம், மதம் மற்றும் பின்னணியின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க முயன்றதற்காகவும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் தமிழகத்தை ஆள அனுமதிக்க கூடாது. உதயநிதி ஸ்டாலின் போன்ற தலைவர்களால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஸ்டாலின், உதயநிதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் தலைமையிலான இத்தகைய இந்திய எதிர்ப்பு சக்திகளைத் தோற்கடிக்க தமிழக மக்கள் தெளிவாக முடிவு செய்துள்ளனர். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.