

பொள்ளாச்சி காந்தி சந்தையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
படம் எஸ்.கோபு
பொள்ளாச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் இன்று ஆடுகள் விலை உயர்ந்ததோடு விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது.
பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். அதன்படி இன்று ஆட்டு சந்தை நடந்தது. சந்தைக்கு பொள்ளாச்சி, பல்லடம், அன்னூர், ஆனைமலை, கிணத்துக் கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
நவ. 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஆடுகளை வாங்குவதற்கு உள்ளூர் மட்டுமல்லாது கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். இதனால் சந்தையில் ஆடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “பொள்ளாச்சி சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் அதிமாகக் கொண்டு வரப்பட்டன. சந்தைக்கு சுமார் 700 முதல் 800 ஆடுகள் வந்தன. 5 கிலோ முதல் 30 கிலோ வரை எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனை ஆகின.
10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும், 25 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை ஆனது. தீபாவளி பண்டிகையையொட்டி வரத்து அதிகரித்தும், விலை குறையவில்லை. மேலும் வழக்கத்தை விட அதிகளவு வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.” என்று கூறினர்.