

புதுடெல்லி: ஆசியாவின் பெரும் பணக்காரர் வரிசையில் முதலிடத்துக்கு தொழிலதிபர் கவுதம் அதானி முன்னேறியுள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முதல் இடத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி கவுதம் அதானி தற்போது ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார்.
கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 92.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. இதன் மூலம் ஆசிய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் அவர் 19-வது இடத்தையும் பெற்றுள்ளார். அதே நேரத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் அவர் ஆசியாவில் 2-வது இடத்திலும், உலக அளவில் 20-வது இடத்துக்கும் சரிந்துள்ளார்.
இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் மிகக் குறைவு என்றாலும், இந்த மாற்றம் சந்தையின் தாக்கத்தை தெளிவாக காட்டியுள்ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 8.1 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு அவரது குழும நிறுவனங்களின் பங்குச்சந்தை செயல்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. சந்தையில் சரிவு ஏற்பட்ட நாட்களில் கூட அதானி குழும நிறுவனப் பங்குகள் சிறப்பான முன்னேற்றத்தில் உள்ளது.
நேற்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் கவுதம் அதானி சொத்து மதிப்பு சுமார் 3.56 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. கவுதம் அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்து, துறை விரிவாக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம், இயற்கை வளங்கள், தரவு மையங்கள், சிமெண்ட், பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறை, நகர்ப்புற மறுவளர்ச்சி, சாலை மற்றும் ரயில் திட்டங்கள், விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், மின்னணு தளங்கள், வணிக அடைகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் அதன் பாதை விரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்துள்ளது.