

புதுடெல்லி: லண்டனைச் சேர்ந்த ஹுருன் நிறுவனத்தின் இந்தியா கிளை சார்பில், 2026-ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதானி குழும தலைவர் கவுதம் அதானியும் அவரது குடும்பத்தினரும் ரூ.9.22 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் ரூ.8.63 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2-வது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி நிவாஸ் மிட்டல் மற்றும் குடும்பத்தினர் ரூ.3.39 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளனர்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சைரஸ் எஸ். பூனாவாலா 4, ஹெச்சிஎல் நிறுவனத்தின் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 5, ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த குமார் மங்கலம் பிர்லா 6, சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் திலீப் ஷாங்வி 7, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 8, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் அனில் அகர்வால் 9, டோரன்ட் பார்மாசூடிகல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சமீர் மேத்தா 10-வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த 2025-ம் ஆண்டு ஹுருன் இந்தியா வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கவுதம் அதானி 2-வது இடத்திலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.