

பொன்னேரியில் ரூ.50 கோடியில் பன்முக சரக்கு முனையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை: பொன்னேரியில் 2-வது ‘கதி-சக்தி’ பன்முக சரக்கு முனையத்தை சென்னை ரயில்வே கோட்டம் அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. 45 பெட்டிகள் கொண்ட முதல் சரக்கு ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களை ஒருங்கிணைத்து, தளவாட செலவுகளை குறைத்து, இணைப்பை மேம்படுத்தும் ஒரு முன்முயற்சியே கதிசக்தி திட்டம். இத்திட்டத்தின்படி சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழிகள் உள்பட பல வகையான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து மேம்படுத்தப்படுகிறது.
அந்தவகையில், அரக்கோணத்தில் பன்முக சரக்கு முனையம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, பொன்னேரி அருகே அனுப்பம்பட்டு கிராமத்தில் ரூ.50 கோடியில் கதிசக்தி மல்டிமாடல் (பன்முக) சரக்கு முனையத்தை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அமைத்தது.
இந்த முனையம் சிகல் மல்டி மாடல் மற்றும் ரயில் டிரான்ஸ் போர்ட் லிமிடெட் (Sical Multimodal and Rail Transport Ltd) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த முனையம் நேற்று முன்தினம் பயன்பாட்டுக்கு வந்தது.
இம்முனையத்திலிருந்து தென்கிழக்கு ரயில்வேயின் கிரீன் ஃபீல்ட் தனியார் சரக்கு முனையத்துக்கு 45 பெட்டிகள் கொண்ட முதல் சரக்கு ரயில் சேவையை தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் தொடங்கி வைத்தார்.
1,389 கிமீ பயணிக்கும் இந்த ரயிலின் மூலம் ரூ.14.80 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளர் ஜே.வினயன், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங், தலைமை சரக்கு போக்குவரத்து மேலாளர் ஆர். முருகராஜ், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தேஜ் பர்தாப் சிங் பங்கேற்றனர்.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும்போது, “இங்குள்ள வசதிகள் மூலம் ஆரம்பக்கட்டமாக மாதத்துக்கு 21 சரக்கு ரயில்களைக் கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்பகுதியின் முக்கிய தளவாட மையமாக திகழும்” என்றனர்.