

புதுடெல்லி: நாட்டின் பல பகுதிகளில் பாலில் கலப்படம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாநில உணவு ஆணையர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (ஃபசாய்) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: "நாட்டின் பல இடங்களில் பாலில் கலப்படம் செய்யப்படும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பால் உற்பத்தியாளர்கள் பலர் பதிவு செய்து உரிமம் பெறாமல் உணவுத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
பால் கூட்டுறவு நிறுவன உறுப்பினர்கள் தவிர மற்ற பால் உற்பத்தியாளர்கள், பால் வியாபாரிகள் ஃபசாய் அமைப்பில் கட்டாயம் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். இதை சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சரிபார்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டிகளில் முறையான வெப்ப நிலையில் பால் பாதுகாக்கப் படுகிறதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
விதிமுறைகளை மீறி செயல்படும் பால் விற்பனையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தவிர அனைத்து பால் வியாபாரிகளும் பதிவு செய்ய வேண்டும் என்ற சிறப்பு நடவடிக்கையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு அமலாக்க நடவடிக்கையை சீரான இடைவெளியில் மேற்கொள்ள மாநில உணவு ஆணையர்களுக்கு ஃபசாய் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஃபசாய் அமைப்புடன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பகிர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.