

சென்னையில் நடைபெற்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில், வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக தலைவர் ஆ.சக்திவேல், நிர்வாகி கவுதம் ஜெயின் உள்ளிட்டோர்.
சென்னை: இந்தியா, வெளிநாடுகளுடன் மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இதை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ் பேசுகையில், பல்வேறு நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதிக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும்.
கடந்த 2025-26-ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூர் நகரின் பங்களிப்பு 53 சதவீதத்துக்கும் அதிகம். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மலிவான வர்த்தக நிதி வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு சுங்க வரிச் சலுகைகளை அளிக்கிறது. இவற்றை எல்லாம் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக தலைவர் சக்திவேல் பேசும்போது, “இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 70 சதவீதத்தைக் கொண்ட சந்தைகளை அணுகுவதற்கு வாய்ப்புகளை வழங்கும்.
ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்த செலவிலான வீட்டு வசதித் திட்டத்தை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் அரசிடம் முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின்படி, வீட்டு கட்டுவதற்கான மொத்த செலவில் 50 சதவீதத்தை அரசு மானியமாகவும், மீதமுள்ள தொகையை சலுகை வட்டிக் கடனாகவும் பெறலாம்” என்றார்.
சிம்பயாசிஸ் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை இணைப் பேராசிரியர் சஞ்சய் குமார் மங்லா, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பயன்படுத்தி சர்வதேச சந்தை வாய்ப்புகளை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தென் மண்டல பொது மேலாளர் சி. ஈஸ்வரசுந்தர் நன்றி கூறினார்.