

புதுடெல்லி: ரூபாய் மதிப்பை உயர்த்த அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவுக்கு ரூ.66 ஆயிரம் கோடி அந்நிய முதலீடு கிடைத்துள்ளதாக எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்பிஐ ஆய்வு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தது. கடந்த 2026 மே 20ம் தேதி மிகக் குறைந்த அளவான ரூ.96.8 என்ற நிலையை எட்டியது.
மேலும் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிலிருந்து அதிக அளவில் (சுமார் ரூ.2.6 லட்சம் கோடி) வெளியேறின. இந்நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும் ரூபாய் மதிப்பை உயர்த்தவும் மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த மாதம் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தின.
கடன் பத்திரங்கள் மீதான வரிகளிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) மற்றும் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களுக்கு (எப்பிஐ) விலக்கு அளிப்பது, எப்சிஎன்ஆர் (பி)வைப்புத் தொகைகளுக்கான ஹெட்ஜிங் செலவுகளுக்கு மானியம் வழங்குவது, பொதுத்துறை நிறுவனக் கடன்களுக்கான சலுகை டாலர்-ஸ்வாப் விண்டோ உள்ளிட்டவை இந்த நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் ரூபாயின் மதிப்பு சுமார் 2.2% உயர்ந்தது. இதுபோல வெளிநாட்டு முதலீடு சுமார் ரூ.66 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த 2 வார காலத்தில், வங்கி அமைப்பில் உள்ள வைப்புத்தொகை சுமார் ரூ.7 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.