தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பைக்கு விரைவில் விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குநர் ஜே.ஆர்.அனூப் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: “தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னைக்கு 4 விமானங்களும், பெங்களூருவுக்கு ஒரு விமானமும் என 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இண்டிகோ நிறுவனத்தில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தூத்துக்குடியில் பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பயணிகளுக்கு ஏற்படும் அசவுரியங்களை கண்காணித்து சரி செய்ய இண்டிகோ நிறுவனம் ஒரு குழுவை அனுப்பியுள்ளது. அதுபோல பயணிகளுக்கு தேவையான உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை தயார் நிலையில் வைத்திருந்தோம்.
அந்தப் பிரச்சினையால் டிசம்பர் 5-ம் தேதி மட்டும் ஒரே ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 45 பயணிகளுக்கு விமான கட்டணத்தை இண்டிகா நிறுவனம் திருப்பி வழங்கியது. மற்ற பயணிகள் அடுத்த விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தில் இரவு நேர சேவைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.
தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் 5 விமானங்களும் தற்போது முழு பயணிகளுடன் சென்று கொண்டிருக்கின்றன. தினமும் 350 பயணிகள் வருகை, 350 புறப்பாடு என 700 பயணிகள் வந்து செல்கின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து தற்போது ஏடிஆர் 72 ரக சிறிய விமானங்கள் இயக்கப்படுகின்றன. பெரிய விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
180 பயணிகள் செல்லக்கூடிய ஏ 321 ரக விமானங்களை இயக்குவதற்காக இண்டிகோ நிறுவனத்தினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது அவர்கள் சென்னை, பெங்களூருக்கு விமானங்களை இயக்குகின்றனர். பெரிய விமானங்களை இயக்கும்போது மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும்” என்றார் அவர்.