

23-வது ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்பெயின் அணி 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது. உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த கால்பந்து திருவிழாவை நடத்தியதன் மூலம் ஃபிஃபா அமைப்புக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம் கிடைத்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஆட்டங்கள் நடக்கும்போது, போட்டி நடத்தும் நகரங்களில் இருக்கும் தங்கும் விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து, விளம்பரம், ஊடகங்கள், பாதுகாப்பு சேவை, உள்ளூர் வர்த்தகம் என அனைத்தும் பெரிய வளர்ச்சியைச் சந்திக்கும்.
23-வது ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. அமெரிக்காவில் 11 நகரங்களிலும், கனடாவில் 2 நகரங்களிலும், மெக்சிக்கோவில் 3 நகரங்களிலும் போட்டிகள் நடந்தன. கடந்த உலகக் கோப்பையில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்த முறை 48 அணிகள் போட்டிகளில் பங்கேற்றன. ஜூன் 11-ம் தேதி தொடங்கிய போட்டி ஜூலை 19-ம் தேதி ஃபைனலுடன் நிறைவடைந்தது.
எதிர்பார்த்ததும், கிடைத்ததும்...
கத்தார் நகரில் கடந்த முறை நடந்த உலகக் கோப்பைத் தொடரில் 760 கோடி அமெரிக்க டாலர்தான் ஃபிஃபாவுக்கு வருமானமாகக் கிடைத்தது. இந்த முறை 3 நாடுகளிலும், அதிக போட்டிகள் நடைபெறுவதால் 1,100 கோடி டாலர் வருமானம் கிடைக்கும் என ஃபிஃபா எதிர்பார்த்தது. ஆனால், டிக்கெட் விற்பனை, ஒளிபரப்பு உரிமை, விளம்பரம் உள்ளிட்டவற்றால், ஃபிஃபா எதிர்பார்க்காத வகையில் 1,500 கோடி டாலர் வருமானம் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த உலகக் கோப்பையில் கிடைத்த வருமானத்தைவிட, இரு மடங்காக இந்த முறை ஃபிஃபாவுக்கு கிடைத்துள்ளது.
பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் 500 கோடி டாலரும், யுஇஎப்ஏ யூரோ 2024 கால்பந்துப் போட்டியில் 290 கோடி டாலரும் மட்டுமே வருமானமாகக் கிடைத்தது. ஆனால், உலகக் கோப்பையில் கிடைத்த வருமானம் ஃபிஃபா எதிர்பாராத ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது.
ஒளிபரப்பு உரிமை மூலம் ஃபிஃபாவுக்கு இந்த உலகக் கோப்பைத் தொடரில் 430 கோடி டாலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 2022 கத்தார் உலகக் கோப்பையில் 340 கோடி டாலர் மட்டுமே கிடைத்திருந்தது. இதில் ஐரோப்பாவில் இருந்து மட்டும் ஒட்டுமொத்த வருமானத்தில் 38% வருமானம், அதாவது 140 கோடி டாலர் கிடைத்துள்ளது.
இரண்டாவதாக, வட அமெரிக்க நாடுகள் மூலம் 100 கோடி டாலர்களும், ஏறக்குறைய 27 சதவீத வருமானமும் கிடைத்தது. ஆசிய பிசிபிக் பிராந்தியத்தில் இருந்து (20%) 7.20 கோடி டாலர்களும், தென் அமெரிக்கப் பகுதியில் இருந்து (10%) 3.60 கோடி டாலர்களும் வருமானமாகக் கிடைத்தன.
விமர்சனங்கள் என்ன ஆனது?
ஃபிஃபா அமைப்பு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்த முறை 48 அணிகள் சேர்க்கப்படும் என அறிவித்தபோது பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. போட்டியின் தரம் குறைந்துவிடும், பார்வையாளர்கள் வருகை குறையும், ஸ்டார் அந்தஸ்து பெற்ற அணிகளின் ஆட்டத்துக்கு மட்டுமே ரசிகர்கள் கூட்டம் வரும் என்று விமர்சிக்கப்பட்டது.
ஆனால், அனைத்து விமர்சனங்களையும் மீறி ஃபிஃபா அமைப்பு 48 அணிகளை சேர்த்து விளையாட வைத்து, போட்டியில் ஸ்வரஸ்யத்தில் தரம் குறையாமல் கொண்டு சென்று, உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை கிடைக்காத வகையில் வருமானத்தையும் ஈட்டியுள்ளது. 104 ஆட்டங்களை இதுவரை 66 லட்சம் பார்வையாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு போட்டியின்போதும், அரங்கில் பார்வையாளர்கள் வருகை 99.7 சதவீதம் இருந்தது என ஃபிஃபா தெரிவித்துள்ளது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஃபிஃபா டைனமிக் விலையை, அதாவது ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப டிக்கெட் விலை மாறுபடும் முறையைக் கொண்டு வந்தது. இது அணிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வந்தபோதிலும், சாதாரண பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து, டிக்கெட் விற்பனையில் எந்தத் தொய்வும் இல்லாமல் சென்றது.
ஒவ்வொரு அணியின் ஆதரவாளர்கள் வேறு வழியின்றி, அதிக விலைக்கு டிக்கெட்டை வாங்கிப் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால், ஃபிஃபாவின் வருமானம் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது. இதில் குறிப்பாக ஒவ்வொரு நாட்டிலும் ஒளிபரப்பு உரிமைக் கட்டணம், ஸ்பான்சர்ஷிப் கட்டணம், வர்த்தக ரீதியான பார்ட்னர்ஷிப் கட்டணம் ஆகியவையும் ஃபிஃபாவுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுத்தது.
இழப்பு யாருக்கு?
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இழப்பைச் சந்தித்தவர்கள் ரசிகர்கள்தான். ஏனென்றால், ஃபிஃபா இந்த முறை டைனமிக் டிக்கெட் விலையைக் கொண்டு வந்ததால், முக்கியப் போட்டிகளுக்கான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்தது. அமெரிக்கா - பாராகுவே முதல் ஆட்டத்துக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலையே 1,000 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நியூ ஜெர்ஸியில் நடந்த ஸ்பயின் - அர்ஜென்டினா இறுதி ஆட்டத்துக்கு டிக்கெட் விலை 32,970 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை போட்டியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் டிக்கெட்டுக்காக ரசிகர்கள் பெருந்தொகையை செலவிட்டனர்.
அதேபோல போட்டியை நடத்திய நகரங்களும் இந்த உலகக் கோப்பைத் தொடரால் இழப்பைச் சந்தித்தன. உலகக் கோப்பைக் காண வரும் ரசிகர்களைக் கவர ஹோட்டல்கள் அறைகள் விரைவாக முன்பதிவாகும். உள்ளூர் வியாபாரம் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. 4,100 கோடி டாலர் வருமானம் உலகப் பொருளாதாரத்தில் சேரும் என்றெல்லாம் ஃபிஃபா கணித்தது. இதில் அமெரிக்காவில் மட்டும் 1,700 கோடி வருமானம் கிடைக்கும். 1.85 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றெல்லாம் கூறியது.
ஆனால், ஃபிஃபா கூறியதைப் போல் பெரிதாக ஏதும் நடக்கவில்லை. போட்டியை நடத்தும் நகரங்களில் பார்வையாளர்கள் வருகை குறைவாக இருந்தது. பலரும் போட்டியின்போது ஏற்படும் சர்ச்சைகளைத் தவிர்க்க வரவில்லை. இதனால் ஹோட்டலில் அறைகளும் பெரிதாக முன்பதிவாகவில்லை. ஆனால், அமெரிக்காவில் மது பார்கள், பப்-கள், ரெஸ்டாரன்ட் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாபம் யாருக்கு?
உலகக் கோப்பை போட்டியால் ஃபிஃபா அமைப்பு, ஒளிபரப்பு உரிமை வாங்கிய நிறுவனங்கள், பெட்டிங் நிறுவனங்கள், ரசிகர்களுக்கான உற்சாகப் பொருட்களை விற்றவர்கள்தான் லாபமடைந்தவர்கள். இதில் அமெரிக்காவில் ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்த ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனல், 30 வினாடி ஸ்லாட்டுக்கு 2 லட்சம் டாலர்கள் முதல் 3 லட்சம் டாலர்கள் வரை விற்பனை செய்தது. அதில் அமெரிக்க போட்டியின்போது 7.50 லட்சம் டாலர்கள் வரை விற்பனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல ஸ்பான்ஸர்ஷிப் நிறுவனங்களான அடிடாஸ், கோககோலா ஆகியவையும் விற்பனையில் சக்கைபோடு போட்டன. அடுத்ததாக போட்டியைக் காணவரும் ரசிகர்கள், வீரர்களை உற்சாகப்படுத்த பட்டங்கள், பேனர்கள், ஆடைகளை வாங்குவார்கள். இதை விற்பனை செய்யும் கடைகள் நல்ல லாபம் ஈட்டினர்.
இங்கிலாந்த அணியின் ஆடைகள், மெக்சிக்கோ, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, பிரேசில், அர்ஜென்டினா ஆடைகள் அதிகளவில் விற்பனையாகின.
அடுத்து, போட்டியில் யார் வெல்வார்கள் என்பது குறித்து நடக்கும் சூதாட்ட நிறுவனங்கள் நல்ல லாபத்தை ஈட்டினர். இந்தப் போட்டித் தொடரில் மட்டும் 5,000 கோடி டாலர் புழங்கியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.