

கோவை: மேட்டுப்பாளையம் ஏல மண்டிகளுக்கு ஊட்டி உருளைக் கிழங்கு வரத்து குறைந்ததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள காந்தி மைதானம் பகுதி யில் உள்ள உருளைக்கிழங்கு ஏல மண்டிகளுக்கு வரத்து குறைந்துள்ளதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் ஊட்டி உருளைக்கிழங்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் 70-க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு ஏல மண்டிகள் மற்றும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கமும் உள்ளது. இங்கு கொண்டு வரப்படும் ஊட்டி உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து ஏலம் மூலம் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஊட்டி உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் சந்தையில் இருந்து சுமார் 50 சதவீதம் கேரளாவுக்கு செல்கிறது. எஞ்சிய 50 சதவீதம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் படுகிறது.
அதேபோல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஊட்டி உருளைக் கிழங்குகளின் தரம் மற்றும் தனிச்சுவையின் காரணத்தால் இவை இலங்கை, மாலத்தீவு, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தலா 45 கிலோ எடை கொண்ட மூட்டை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மூட்டை உருளைக்கிழங்கு விற்பனைக்கு வரும் நிலையில், நீலகிரியில் உருளைக்கிழங்கு பயிரிடும் பரப்பளவு குறைந்தது மற்றும் போதிய மழையில்லாததால் நடப்பாண்டில் 1,500 முதல் 2,000 லோடு வரை தான் வரத்து வருகிறது.
3,000 மூட்டைகளுக்கு மேல் வரத்து வந்தால் தான், ஏற்றுமதிக்கு வியாபாரிகள் அதிகம் முன் வருவார்கள். ஆனால் தற்போது 1800 மூட்டைகள் மட்டுமே வந்துள்ளது.
உருளைக்கிழங்கு பற்றாக்குறையால் 30 முதல் 40 சதவீதம் வரை ஏற்றுமதி குறைந்துள்ளது. நேற்று 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.2,040 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.