

புதுடெல்லி: சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால், மாதாந்திர பிஎப் பங்களிப்பு தொகை ரூ.3,917 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) பிடித்தம் செய்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள உச்ச வரம்பை மத்திய அரசு ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியது. இது கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பிஎப் பங்களிப்பாக எவ்வளவு பிடித்தம் செய்யப்படும் என்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள கேள்வி-பதில் தொகுப்பில் கூறியிருப்பதாவது: இதற்கு முன்பு ரூ.15 ஆயிரம் உச்சவரம்பாக இருந்தபோது, ஊழியர்கள் தங்கள் பிஎப் சேமிப்புக்காக மாதம் ரூ.1,800 செலுத்தினர்.
இனி ரூ.25 ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் ரூ.3,000 (ரூ.25,000 சம்பளத்தில் 12%) பங்களிப்பார்கள். இதுதவிர, வேலை வழங்கும் நிறுவன பங்களிப்பு (3.67%) ரூ.550-லிருந்து ரூ.917 ஆக உயரும். இதன் மூலம் கட்டாய மாத பிஎப் பங்களிப்பு ரூ.3,917 ஆக உயர்கிறது.
மேலும், வேலை வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்பிலிருந்து 8.3% பங்களிப்பான ரூ.2,083 இனி ஓய்வூதிய நிதியத்துக்கு (இபிஎஸ்) செல்லும் (இதற்கு முன்பு இது ரூ.1,250 ஆக இருந்தது). ஒரு ஊழியரின் மாத சம்பளம் ரூ.20,000 ஆக இருந்தால், கட்டாய பிஎப் பங்களிப்பு ரூ.3,134 ஆக இருக்கும். இதில் ஊழியர் பங்கு ரூ.2,400 மற்றும் வேலை வழங்கும் நிறுவன பங்கு ரூ.734 ஆகும். மேலும் வேலை வழங்கும் நிறுவன பங்கிலிருந்து இனி ரூ.1,666 ஓய்வூதிய நிதியத்துக்குச் செல்லும்.
ஆனால் ஒரு ஊழியர் மாதம் ரூ.35,000 சம்பாதித்தால், கட்டாய பிஎப் பங்களிப்பு ரூ.6,000 ஆக இருக்கும் (ஊழியர் மற்றும் வேலை வழங்குநர் இருவரிடமிருந்தும் தலா ரூ.3,000). இபிஎஸ் என்பது இபிஎப்ஓ ஊதிய உச்சவரம்பை மீறாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், இதில் எந்தத் தொகையும் ஓய்வூதிய நிதிக்குச் செல்லாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.