

திருவனந்தபுரம்: கேரளத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகத்தில் முழு அளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளைக் கேரள முதல்வர் வி.டி.சதீசன் அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கி வைத்தார்.
துறைமுகத்தின் நுழைவாயிலில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் கன்டெய்னரை கொடியசைத்து அனுப்பி வைத்து முதல்வர் வி.டி. சதீசன் பேசியதாவது: விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் வணிக ரீதியிலான வர்த்தகம் தொடங்கியிருப்பது கேரள வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நாளாகும். உலகளாவிய வர்த்தகத்திற்கான புதிய வாசல் இன்று திறக்கப்பட்டுள்ளது.
இத்துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும், புதிய வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்ய வேண்டும். ‘மிஷன் சமுத்ரா’ திட்டத்தின் கீழ் கேரளத்தின் முக்கியத் துறைமுகங்கள் மற்றும் 600 கி.மீ நீளமுள்ள கடற்கரைப் பகுதிகள் இணைக்கப்பட்டு, மாநிலம் ஒரு பெரிய கடல்சார் வர்த்தக மையமாக மாற்றப்படும். இவ்வாறு கேரள முதல்வர் வி.டி. சதீசன் பேசினார்.