

புதுடெல்லி: வீடுகளில் சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுக்கு பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த மத்திய அரசு புதிய கொள்கையை உருவாக்கி வருகிறது.
கச்சா எண்ணெயை நம்பியிருக்கும் நிலையை குறைக்க பெட்ரோலில் கச்சா எண்ணெயை கலந்து விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி இப்போது நாடு முழுவதும் 20 % எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20) விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில், வீடுகளில் சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுக்கு (எல்பிஜி) பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான வரைவு கொள்கையை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இந்த கொள்கையில், எத்தனாலைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், மானிய திட்டங்கள் மற்றும் இதற்கான தனி விநியோகச் சங்கிலியை உருவாக்குவது ஆகியவை இடம் பெறக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், எரிபொருள் விநியோக நிறுவனங்களின் கூட்டமைப்புகளும் அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இக்கொள்கை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எத்தனால் உற்பத்தித் திறன் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ‘கேர்-எட்ஜ் ரேட்டிங்ஸ்’ அறிக்கையின்படி, எத்தனால் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2,000 கோடி லிட்டரைத் தாண்டியுள்ளது.
அரசின் வழிகாட்டுதலின்படி, எத்தனாலில் இயங்கும் சமையல் அடுப்புகள் ஏற்கெனவே சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும், பெட்ரோல் பங்குகளில் எத்தனால் விநியோக மையங்களை அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தப்படலாம். நுகர்வோர் இந்த ஏடிஎம்கள் மூலம் சிறிய கேன்களில் எத்தனாலை வாங்கிச் சென்று சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எல்பிஜி இறக்குமதிக்கு இந்தியா இன்னமும் வளைகுடா நாடுகளையே பெரிதும் நம்பியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் இந்தியாவின் எல்பிஜி விநியோகத்தைப் பாதித்தது. இதையடுத்து, எல்பிஜிக்கு மாற்றாக உள்நாட்டு எத்தனாலைப் பயன்படுத்துவது நாட்டின் ஆற்றல் பாதுகாப்புக்கு மிகவும் நல்லது என நிபுணர்கள் கருதுகின்றனர். மாற்று சமையல் எரிபொருட்களுக்கு மாறுவதால் சுமார் ரூ.2 லட்சம் கோடியை சேமிக்க முடியும்.