

மதுரை: மத்திய அரசின் ‘ஹப் அண்ட் ஸ்போக்’ திட்டத்தால் மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா என தொழில்முனைவோர், பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன்நாயுடு, நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையை உலகளாவிய நிலைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் ‘மையம் மற்றும் இணைப்பு' (‘ஹப் அன்ட் ஸ்போக்’) திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து டெல்லி விமான நிலையத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், அவர் விரிவாக ஆய்வு செய்தார். இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய மைல் கல்லான இத்திட்டம், மதுரையைப் போன்ற வளர்ந்து வரும் நகரங்களுக்கு எப்படிப் பயனளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘ஹப் அண்ட் ஸ்போக்' திட்டத்தின்படி டெல்லி, சென்னை போன்ற பெரிய நகரங்கள் 'ஹப்' (மையம்) ஆகச் செயல்படும். மதுரை போன்ற நகரங்கள் ‘ஸ்போக்' (இணைப்புப் புள்ளிகள்) ஆகச் செயல்படும்.
மகேந்திரவர்மன்
இது குறித்து மதுரை உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தகக் குழும ஆலோசகர் டாக்டர் மகேந்திரவர்மன் கூறுகையில், ‘ஹப் அண்ட் ஸ்போக்’ திட்டம் மூலம் மதுரையிலிருந்து அமெரிக்கா அல்லது லண்டன் செல்லும் ஒரு பயணி, இடையில் சென்னை அல்லது டெல்லியில் இறங்கி மீண்டும் சோதனைக்கு உட்பட வேண்டியதில்லை.
சர்வதேச பயணிக ளுக்கான குடியுரிமை, சுங்கச் சோதனை ஆகி யவை மதுரையிலேயே முடிந்துவிடும். எனவே, அவர்கள் தாமதம் இன்றி சர்வதேச விமானங்களில் உடனடியாக மாறிச் செல்லலாம். டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரிய விமான நிலையங்களுடன் மதுரையை இணைக்க அதிகப்படியான உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும். இதனால் பயணிகள் எண் ணிக்கை அதிகரித்து விமானக் கட்டணம் குறையும். மதுரையின் மல்லிகை மற்றும் காய்கறிகள் இனி விரைவாகச் சர்வதேசச் சந்தைகளைச் சென்றடையும்.
சுங்கச் சோதனைகள் இங்கேயே முடிவதால் ஏற்றுமதியாளர்களுக்கு நேரம் மிச்சமாகும். இந்தப் புதிய கொள்கையில், "மெட்ரோ அல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை" எனக் குறிப்பிட்டிருப்பது மதுரைக்குச் சாதகமான அம்சம்.
குறிப்பாக ஆசியான் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 18 சுற்றுலா நகரங்களுடன் மதுரையும் ஒரு சுற்றுலா நகரமாக சேர்க்கப்பட்டால், இந்த ஒரே நகர்வில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உட்பட 11 ஆசிய நாடுகளில் இருந்து நேரடியாக மதுரைக்கு விமானங்களை இயக்க முடியும்.
இதுநாள் வரை திருச்சி, சென்னை மற்றும் திருவனந்தபுரம் வழியாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வந்த லட்சக்கணக்கான தென்தமிழக மக்களுக்கு இது மிகவும் பயனளிக்கும். இந்தத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.